தொடர்வண்டி கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்!
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்வண்டித்துறையின் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், அதை சமாளிக்கும் வகையில் பயணிகள் கட்டணத்தை உயர்த்த இந்திய தொடர்வண்டி வாரியம் திட்டமிட்டிருக்கிறது. தொடர்வண்டித் துறை உத்தேசித்துள்ள கட்டண உயர்வு கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு அதிகம் என்பதால், அது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தொடர்வண்டிகளில் பயணிக்க முடியாத நிலையை ஏற்படுத்திவிடும்.
பொருளாதார மந்தநிலை காரணமாக தொடர்வண்டித்துறையின் சரக்குப்போக்குவரத்து வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தொடர்வண்டித்துறையின் செலவுகள் அதிகரித்துள்ளன. தொடர்வண்டித்துறையில் 12 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், 13 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டியுள்ளது. இதற்காக அரசிடமிருந்து கிடைக்கும் உதவி போதுமானதாக இல்லை என்பதால், நிலைமை சமாளிக்க பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு தொடர்வண்டி வாரியம் வந்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் தொடர்வண்டி கட்டண உயர்வு சமாளிக்கக்கூடிய வகையில் இருந்தது. ஆனால், இப்போது அனைத்து வகுப்புகளின் பயணிகள் கட்டணத்தையும் கிலோமீட்டருக்கு 40 பைசா வீதம் உயர்த்த தொடர்வண்டி வாரியம் திட்டமிட்டிருக்கிறது. இது நினைத்துப் பார்க்க முடியாத அளவு ஆகும்.
உதாரணமாக, சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு 653 கிலோ மீட்டர் ஆகும். இதற்கு அடிப்படைக் கட்டணமாக 335 ரூபாயும், முன்பதிவுக்கட்டணம், விரைவு வண்டிக்கான கட்டணம் ஆகியவற்றுக்காக 50 ரூபாயும் சேர்த்து மொத்தம் 385 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பேருந்து கட்டணத்துடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு ஆகும். அதனால் தான் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பேருந்துகளை தவிர்த்து விட்டு தொடர்வண்டிகளில் பயணிக்கின்றனர். இது தான் தொடர்வண்டித்துறை வெற்றிக்கு காரணமாகும்.
தொடர்வண்டி வாரியம் திட்டமிட்டுள்ளவாறு கிலோ மீட்டருக்கு 40 பைசா உயர்த்தப்பட்டால் சென்னை & திருநெல்வேலி இடையிலான அடிப்படைக் கட்டணம் 594 ரூபாயாகவும், பிற கட்டணங்களையும் சேர்த்து 644 ஆகவும் அதிகரிக்கும். இது 77 விழுக்காடு உயர்வு ஆகும். இந்த கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தால், அது பேருந்து கட்டணத்தை விட மிகவும் அதிகமாக இருக்கும். இவ்வளவு அதிக கட்டணம் செலுத்தி தொடர்வண்டியில் பயணிக்க ஏழை, நடுத்தர மக்கள் முன்வர மாட்டார்கள். இது தொடர்வண்டித்துறையின் வளர்ச்சிக்கு வழிவகுப்பதைத் தவிர வீழ்ச்சிக்குத் தான் வழிவகுக்கும்.
பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்திய தொடர்வண்டித்துறை இணை அமைச்சர்களாக இருந்த காலங்கள் உள்ளிட்ட 11 ஆண்டுகளில், அதாவது 2002 முதல் 2012 வரையிலான காலத்தில் பயணிகள் கட்டணம் ஒரு பைசா கூட உயர்த்தப்படவில்லை. மாறாக, ஒரு முறை தொடர்வண்டிக் கட்டணம் அடையாளமாக குறைக்கப்பட்டது. ஆனால், அதற்குப் பிந்தைய 7 ஆண்டுகளில் தொடர்வண்டி கட்டணம் 4 முறை உயர்த்தப்பட்டிருக்கிறது. 4 முறைகளிலும் சேர்த்து எந்த அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டதோ, அதே அளவுக்கு கட்டண உயர்வை ஒரே முறையில் நடைமுறைப்படுத்த முயல்வது எந்த வகையிலும் நியாயமல்ல. இது ஏழைகளிடமிருந்து தொடர்வண்டிகளை விலக்கி வைத்து விடும்.
தொடர்வண்டித்துறை என்பது மக்களுக்கு சேவை வழங்கும் துறையாகும். இதில் லாப நோக்கத்தைப் பார்க்கக்கூடாது. தொடர்வண்டிகளின் இயக்கச் செலவுகளுக்கும், அத்துறையின் வருவாய்க்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை. தொடர்வண்டித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 13 லட்சம் ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக செலவழிக்கப்படும் தொகை தான் அத்துறையின் இழப்புக்கு முக்கியக் காரணமாகும். மத்திய அரசின் பெரும்பன்மையான துறைகளின் இன்றைய நிலை இதுதான். ஆனாலும், அத்தகைய துறைகள் மக்களுக்கு நேரடியாக சேவை வழங்குவதால் அந்த இழப்பை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது.
அதேபோல், தொடர்வண்டித்துறையின் ஓய்வூதிய சுமையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன்மூலம் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வாகனமாக தொடர்வண்டிகளின் பயணக் கட்டணம் உயர்த்தப்படாமல், இப்போதுள்ள நிலையிலேயே தொடருவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.