ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் 74-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் சீனா எழுப்பியதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது!
ஐக்கிய நாடுகள் சபையின் 74-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைப்பெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் பேசினர்.
பிரதமர் மோடி தனது உரையின் போது., "காஷ்மீர் விவகாரம் குறித்து எந்தவிதத்திலும் குறிப்பிடவில்லை, ஆனால், தீவிரவாதத்தை ஒழிக்க உலக நாடுகள் ஒருங்கிணைய வேண்டும் என்று வலியறுத்தினார்.
இதனையடுத்து சுமார் 50 நிமிடங்கள் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது பேச்சில் பாதிநேரம் காஷ்மீர் நிலவரம் குறித்து விளக்கவும், ஜம்மு காஷ்மீர் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சிக்கவும் செலவிட்டார். இதற்கு இந்தியா சார்பில் தகுந்த பதில் தரப்பட்டது.
அதேப்போல் சீனாவும் ஐ.நா.வில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி பேசியது. "ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ள வேண்டும். ஐநா தீர்மானத்தின்படி காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண வேண்டும். அதுவரை காஷ்மீரில் மாற்றங்கள் ஏற்படக்கூடாது. தன்னிச்சையாக முடிவு ஏதும் எடுப்பது சரியல்ல" என சீனா குறிப்பிட்டது.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சீனா தேவையில்லாமல் ஐநா-வில் எழுப்பியதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ராவிஷ் குமார் கூறுகையில், "ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் ஒரு பகுதிகள். சமீபத்தில் நடந்துள்ள சம்பவங்கள் அனைத்தும் எங்களின் உள்நாட்டு விவகாரம்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை சீனா நன்கு அறியும். இது முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை. இந்தியாவின் இறையாண்மை, எல்லை ஒருங்கிணைப்புக்கு மற்ற நாடுகள் மதிப்பளிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்." என தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சீனாவும், பாகிஸ்தானும் சாலை அமைத்து வருவதையும் நிறுத்த வேண்டும் எனவும் ராவிஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.