தமிழில் நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!
நீட் தேர்வில் தமிழ்மொழி வினாத்தாள்களில் பிழை இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், பிழை இருந்த 49 வினாக்களுக்கு 4 மதிப்பெண்கள் வீதம் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மதிப்பெண் பட்டியலை திருத்தம் செய்யப்பட்ட பிறகு மீண்டும் மதிப்பெண் பட்டியலை சிபிஎஸ்இ வெளியிட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதோடு தற்போது நடைபெற்று வரும் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நிறுத்தவும் நீதிமன்றம் தெரிவித்தது.
இதனை எதிர்த்து சிபிஎஸ்இ தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் மனுதாரர் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். மனுதாரரும், மாநிலங்களவை எம்.பி.யுமான டி.கே.ரங்கராஜன் கேவியட் மனு தாக்கல். இதனால் சிபிஎஸ்இ சார்பில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டால் மனுதாரரிடம் கருத்துக்கேட்ட பின்பே நீதிமன்றம் தீர்ப்பு வழங்க முடியும்.