ஹரியானா காங்கிரஸ் தலைவருக்கு ரூ.200 கோடிக்கும் மேல் சொத்து இருப்பதாக வருமான வரித்துறையினர் கண்டுபிடிப்பு!!
மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் கடந்த 23 ஆம் தேதி நடத்திய அதிரடி சோதனைகளில் சுமார் 200 கோடி ரூபாய்க்கான கருப்பு பணம் வெளிநாட்டில் பதுக்கப்பட்டது கண்டுபிடித்துள்ளனர். ஹரியானா மாநிலம் ஆதம்பூர் தொகுதி எம்எல்ஏ மற்றும் மாநில காங்கிரஸ் தலைவருமான குல்தீப் பிஸ்னாய் என்பவர் வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில், அவருக்கு சொந்தமான 13-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி வருமானவரித்துறையினர் அதிரடி சிதனையை நடத்தினர்.
டெல்லி, ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 13 இடங்களில் இரண்டு நாட்களுக்கு மேலாக நடத்தப்பட்ட சோதனையில் குல்தீப் பல்வேறு நிறுவனங்கள் நடத்தி வந்ததும், வெளிநாடுகளில் சொத்து வாங்கி குவித்திருப்பதும் தெரிய வந்தது. இதற்கான ஆதாரமும், ஆவணங்களும் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சோதனையில், இதுவரை சுமார் 200 கோடி ரூபாய் பணம் வெளிநாடுகளில் சொத்தாக மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதுதவிர உள்நாட்டில் 30 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பலப்பல ஆண்டுகளாக இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், பனாமா, ஜெர்சி உள்ளிட்ட இடங்களில் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்து பணம் பதுக்கியதாக அரசு இந்த சோதனை குறித்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.