ஓம் பிர்லா vs கொடிக்குன்னில் சுரேஷ் - சபாநாயகர் தேர்தலில் காங்கிரஸ் போடும் பிளான் என்ன?

Lok Sabha Speaker Election: மக்களவை சபாநாயகர் தேர்தலில் பாஜகவின் ஓம் பிர்லா போட்டியிட உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் கொடிக்குன்னில் சுரேஷ் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 25, 2024, 01:01 PM IST
  • இதன்மூலம், சபாநாயகர் தேர்தல் முதல்முறையாக மக்களவையில் நடைபெற உள்ளது.
  • மக்களவையில் நாளை சபாநாயகர் தேர்தல் நடைபெற்று வருகிறது.
  • கொடிக்குன்னில் சுரேஷ் கேரளாவில் இருந்து 8 முறை எம்.பி.,யாக தேர்வானவர்.
ஓம் பிர்லா vs கொடிக்குன்னில் சுரேஷ் - சபாநாயகர் தேர்தலில் காங்கிரஸ் போடும் பிளான் என்ன? title=

Lok Sabha Speaker Election: 18ஆவது மக்களவை தேர்தலுக்கு பின் முதல்முறையாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று (ஜூலை 24) தொடங்கியது. நேற்றும், இன்றும் மக்களவை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் மேற்கொண்டனர். இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்ட பாஜகவின் கட்டக் மக்களவை உறுப்பினரான பர்த்ருஹரி மஹ்தாப் அனைவருக்கும் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்துவைத்தார். 

தொடர்ந்து, மக்களவை சபாநாயகர் தேர்தல் நாளை (ஜூலை 25) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மதியம் 12 மணிவரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. வழக்கமாக, மக்களவை சபாநாயகர் போட்டியின்றியே தேர்வு செய்யப்படுவார். சுதந்திரத்திற்கு பின் மக்களவையில் மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெற்றதே இல்லை. அந்த வகையில், இந்த முறையும் அதே நடைமுறைதான் இருக்கும் என கூறப்பட்டது. 

சபாநாயகர் பொறுப்புக்கு பாஜக சார்ந்தவர்கள் நியமிக்கப்படுவார்களா அல்லது கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சிக்கு ஒதுக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், கடந்த முறை சபாநாயகராக இருந்த ஓம் பிர்லாவே மீண்டும் பாஜக சார்பில் சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவார் என தகவல் வெளியானது. அவர் வேட்புமனுவையும் இன்று தாக்கல் செய்தார்.

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மெளனம் ஏன்... கார்கேவுக்கு ஜே.பி.நட்டா கேள்வி

கடைசி 10 நிமிடங்கள்...

சபாநாயகர் தேர்தலில் பாஜக நிறுத்தும் வேட்பாளருக்கு தாங்கள் அளிப்பதாகவும், ஆனால் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என காங்கிரஸ் நிபந்தனை விடுத்தது. இதனை பாஜக ஏற்காத நிலையில் காங்கிரஸ் கட்சி அதன் மூத்த மக்களவை உறுப்பினர் கொடிக்குன்னில் சுரேஷை மக்களவை சபாநாயகர் தேர்தலுக்கு வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது, அவரும் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். 12 மணிவரை வேட்புமனுவை தாக்கல் செய்ய நேரம் இருந்த நிலையில், பாஜகவிடம் இருந்து 11.50 வரை எந்த பதிலும் கிடைக்காததால் கடைசி 10 நிமிடத்தில் கொடிக்குன்னில் சுரேஷ் வேட்புமனுவை தாக்கல் செய்தார் என கூறப்படுகிறது. 

காங்கிரஸின் திட்டம் என்ன?

இதன்மூலம் சபாநாயகர் தேர்தல் நாளை நாடாளுமன்றத்தில் நடைபெறும். எந்த கட்சிக்கும் பெரும்பான்மையான எண்ணிக்கை இல்லாததால் பாஜக மற்றும் காங்கிரஸ் என இரண்டு கட்சிகளும் கூட்டணி கட்சிகளையே நம்பியிருக்கின்றன. எப்படியும் பாஜகவுக்கே பெரும்பான்மை கிடைக்கும் என்றாலும், இந்த விவகாரத்தில் ஜனநாயக முறையப்படி மோத காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. கொடிக்குன்னில் சுரேஷ்தான் தற்போதைய மக்களவையில் அதிக முறை வெற்றி பெற்ற மூத்த உறுப்பினராவார். ஆனால், அவருக்கு பதில் நேற்று பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தது. கொடிக்குன்னில் சுரேஷ் இதுவரை 8 முறை எம்.பி.,யாக தேர்வான நிலையில், பர்த்ருஹரி மஹ்தாப் 7 முறையே தேர்வாகி உள்ளார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், சபாநாயகர் தேர்தலின் மூலம் மக்களவையின் அதன் முழு பலத்தையும் காண காங்கிரஸ் கட்சி திட்டமிடுகிறது. துணை சபாநாயகர் பொறுப்பு பெரும்பாலும் எதிர்க்கட்சிகளுக்கே ஒதுக்கப்படும். ஆனால், 2014ஆம் ஆண்டில் அது அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு முதல் அந்த இடம் காலியாக உள்ளது. துணை சபாநாயகர் பொறுப்பை தங்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கைக்காக காங்கிரஸ் விடாமல் போராடுகிறது என்பது இதன்மூலம் தெரிகிறது.

யார் இந்த கொடிக்குன்னில் சுரேஷ்?

கேரளா மாநிலத்தின் மாவேலிக்கரா தொகுதியில் இருந்து இம்முறை தேர்வான கொடிக்குன்னில் சுரேஷ்  
தற்போது கேரள காங்கிரஸ் செயல் தலைவராக உள்ளார். மேலும், காங்கிரஸ் காரிய கமிட்டின் உறுப்பினராகவும் உள்ளார். மன்மோகன் சிங் காலத்தில் மத்திய இணை அமைச்சராகவும் ஈராண்டு காலம் செயல்பட்டுள்ளார். 
மேலும், 1989, 1991, 1996, 1999 ஆகிய நான்கு பொதுத் தேர்தல்களிலும் அடூர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற இவர், 1998ஆம் ஆண்டு தேர்தலிலும், 2004ஆம் ஆண்டு தேர்தலிலும் தோல்வியடைந்தார். 2009, 2014, 2019, 2024 என அடுத்தடுத்து மாவேலிக்கரா தொகுதியில் வெற்றி பெற்ற இவர்தான், தற்போது மக்களவையில் அதிக காலம் எம்.பி.,யாக உள்ள நபர் ஆவார். இவர் மொத்தம் 29 ஆண்டுகளாக எம்.பி.,யாக செயல்பட்டுள்ளார். 

மேலும் படிக்க | மாபியா மற்றும் ஊழல்வாதிகளிடம் கல்வித்துறை - பிரியங்கா சாடல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News