இந்தியா-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே சைபர் பாதுகாப்பு, திரைப்பட தயாரிப்பு உள்ளிட்ட 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின!
இன்று டெல்லியில் இந்தியா மற்றும் இஸ்ரேல் நாட்டு இரு பிரதமர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த போது, மோடி ஒரு புரட்சிகரத் தலைவர் என நேதன்யாகு புகழாரம் சூட்டினார்.
முன்னதாக 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் சந்தித்துப் பேசினர். இதனையடுத்து இரு நாடுகளுக்கு இடையே சைபர் பாதுகாப்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு, திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் ஒன்பது ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
பின்னர் இரு நாட்டு பிரதமர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். சந்திப்பின்போது பிரதமர் மோடி தெரிவித்ததாவது...
இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்பத்தினை வேளாண் துறையில் பயன்படுத்திக் கொள்வது குறித்தும், இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது குறித்தும் இருவரும் பேசியதாக தெரிவித்தார்.
மேலும் இரு நாட்டு மக்களும் நெருக்கமாக இந்திய கலாச்சார மையம் ஒன்று இஸ்ரேலில் விரைவில் திறக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பின்னர் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பேசுகையில், இஸ்ரேலுக்கு வந்த முதல் இந்திய பிரதமர் என்கிற முறையில் மோடியின் இஸ்ரேல் வருகை ஒரு முன்மாதிரியாக அமைந்தது, மேலும் மோடி ஒரு புரட்சிகரத் தலைவர் என்றும் அவல் இந்தியாவில் ஒரு புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் எனவும் தெரிவித்தார்.
இந்தியாவில் வசிக்கும் யூதர்களுக்கு ஒரு சில நாடுகளில் இருப்பதைப் போல துன்புறுத்தல் எதுவும் இல்லை என்று கூறிய நேதன்யாகு, இது இந்தியாவின் மகத்தான நாகரிகத்தையும் சகிப்புத் தன்மையையும் ஜனநாயகத்தையும் வெளிக்காட்டுகிறது என்றார். மோடி விரும்பினால் அவரோடு யோகா வகுப்பில் பங்கேற்க தயாராக இருப்பதாகவும் நேதன்யாகு தெரிவித்தார்.
#WATCH PM Narendra Modi and Israeli PM Benjamin Netanyahu issue press statement in Delhi https://t.co/digItOo5up
— ANI (@ANI) January 15, 2018
இந்தியாவுடன் சேர்ந்து திரைப்படத் தயாரிப்பில் இறங்குவது குறித்து ஆர்வத்துடன் இருப்பதாகவும் அவர் தெரவித்தார். முன்னதாக இன்று அவர் பேசுகையில் ஐ.நா. பொதுச்சபையில் ஜெருசலேம் விஷயத்தில் இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது இரு நாட்டு உறவைப் எந்த வகையிலும் பாதிக்காது என்றும் கூறியது குறிப்பிடத்தக்ககது!