பிரதமர் மோடி பேட்டி: 'சனாதனம் குறித்து கேவலமான கருத்து...' திமுக மீது சராமாரி குற்றச்சாட்டு

PM Modi Latest Update News: பிரமதர் மோடி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சனாதன தர்மம் குறித்த உதயநிதியின் கருத்து, திமுகவின் அரசியல் நிலைப்பாடு, தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி, பன்முகத்தன்மை ஆகியவை குறித்து பேசியுள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Apr 15, 2024, 10:08 PM IST
  • திமுக காரர்கள் நம்மை 'பானிபூரி வாலாக்கள்' எனக் கேலி செய்கின்றனர் - பிரதமர் மோடி
  • நான் தாய்மொழியை வணங்குகிறேன், அதன் முக்கியத்துவத்தையும் அதிகரித்துள்ளேன் - பிரதமர் மோடி
  • சனாதனம் குறித்து கேவலமான கருத்துகளைத் தெரிவிப்பவர்களுடன் எப்படி அமர்ந்திருக்கிறீர்கள்? - மோடி
பிரதமர் மோடி பேட்டி: 'சனாதனம் குறித்து கேவலமான கருத்து...' திமுக மீது சராமாரி குற்றச்சாட்டு title=

PM Modi Latest Update News: 18ஆவது மக்களவை தேர்தல் வரும் ஏப். 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஆகியவை தேசிய அளவில் ஆட்சியை கைப்பற்ற கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. 

ஏப். 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், தேர்தல் நடக்கும் தொகுதிகளில் ஏப். 17ஆம் தேதி மாலை முதலே பிரச்சாரங்கள் ஓய்ந்துவிடும். அதன்பின், பரப்புரையோ அல்லது விளம்பரமோ செய்யக்கூடாது என்பது தேர்தல் நடத்தை விதியாகும். இதனால், அனைத்து கட்சிகளும் தங்களின் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளன.

பிரதமர் மோடியின் பேட்டி

அந்த வகையில், பரப்புரையின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி ANI ஊடகத்திற்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அந்த பேட்டியில் பாஜகவின் வாக்குறுதிகள், எதிர்கால திட்டங்கள், தேர்தல் பத்திரம் விவகாரம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மம் விவகாரம் குறித்தும் பிரதமர் மோடி பேசியுள்ளார், அதில் திமுகவை பிரதமர் மோடி கடுமையாக சாடி உள்ளார். 

"தென்னிந்தியாவில் எங்களின் கட்சி ஐந்து தலைமுறைகளாக இங்கே பணியாற்றி வருகிறோம், எனவே பணிகள் தொடரும். காங்கிரஸ் மீதான அதிருப்தியால் தான் மக்கள் மாநில கட்சிகளை நோக்கி சென்றனர். இப்போது மாநில கட்சிகளின் மீதும் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுவிட்டது. இந்த சூழலில், தலைநகர் டெல்லியில் பாஜக தலைமையிலான அரசை மக்கள் பார்த்துள்ளனர். 

மேலும் படிக்க | தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024 முழு வேட்பாளர் பட்டியல்.. எந்த தொகுதியில் யார் போட்டி?

பாஜகவை நோக்கி வரும் தமிழர்கள்...

தமிழர்கள் நாடு முழுவதும் பல மாநிலங்களில் வசிக்கின்றனர். அவர்கள் தங்களின் சொந்த ஊருக்குச் செல்லும்போது அந்தந்த மாநிலங்களில் என்ன நடந்தது என்பதை அங்கு கூறுகின்றனர். எனவே மக்கள் இயற்கையாகவே இரு மாநிலங்களையும் ஒப்பிடத் தொடங்குவார்கள். உதாரணத்திற்கு, நான் ஏற்பாடு செய்த தமிழ் காசி சங்கமத்தைச் சொல்லலாம். 

தமிழ்நாட்டில் திமுக காரர்கள் நம்மை 'பானிபூரி வாலாக்கள்' எனக் கேலி செய்கின்றனர். ஆனால், காசி சங்கமத்திற்கு வந்த தமிழ் மக்கள், காசியைப் பார்த்து, இப்பகுதி மிகவும் முன்னேறியிருப்பதைப் பார்க்கிறார்கள். பல முன்னேற்றங்கள் இங்கு நடந்துள்ளன. இதனால் மக்கள் திமுகவின் மீது அதிகம் கோபமடைந்துள்ளனர். அந்த கோபம்தான் மக்களை பாஜக நோக்கி நேர்மறையான முறையில் வரச் செய்துள்ளது" என்றார். 

'அண்ணாமலை ஒரு நல்ல தலைவர்'

மேலும், பாஜக குடும்ப ஆட்சி நடத்தும் கட்சியல்ல என்றும் இங்கு அனைவருக்கும் தகுந்த வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினார். தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பாராட்டியும் பேசினார். தொடர்ந்து,"அண்ணாமலை ஒரு நல்ல தலைவர். இளைஞரான அவர் ஐபிஎஸ் பொறுப்பை ராஜினாமா செய்தார். பலரும் நினைப்பார்கள், அவர் அவ்வளவு பெரிய பொறுப்பைத் துறந்துவிட்டு பாஜகவில் சேர்ந்திருக்கிறாரே, அவர் திமுகவில் சேர்ந்திருந்தால் பெரிய புகழை அடைந்திருப்பாரே என்று... ஆனால் அவர் பாஜகவுக்கு வந்தார். 

மேலும் படிக்க | தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?

பாஜக மீது நம்பிக்கை கொண்டு அவர் அங்குச் சென்றிருக்கிறார் என்பது மக்களுக்குப் புரிந்திருக்கும். எனவே, அது மக்களவை பெரியளவில் ஈர்த்தது. எங்கள் கட்சியின் சிறப்பே, இங்குச் சிறு தொண்டர்கள் முதல்  அனைவருக்கும் அவரவருக்கு ஏற்ற வாய்ப்புகள் வழங்கப்படும். இது குடும்பம் சார்ந்த கட்சியல்ல. ஒரு சில கட்சிகள் இருக்கின்றன, அவற்றின் குறிக்கோளே குடும்பத்திற்காக மட்டும்தான். எனவேதான், பாஜகவில் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. 

சனாதன விவகாரம்: பிரதமர் மோடியின் பதில்...

உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மம் மீதான  கருத்து குறித்த கேள்விக்குப் பிரதமர் மோடி,"இந்த கேள்வியை நான் வேறு விதத்தில் பார்க்கிறேன். இந்த கேள்வி காங்கிரஸை நோக்கி இருக்க வேண்டும். காங்கிரஸ் மகாத்மா காந்தியுடன் தொடர்புடையது. காங்கிரஸின் இந்திரா காந்தி எப்போதும் ருத்ராட்ச மாலையைக் கழுத்தில் அணிந்திருக்கக் கூடியவர். 

இந்த கேள்வி நிச்சயம் காங்கிரஸ் கட்சியை நோக்கி இருந்திருக்க வேண்டும். ஏன் உங்களுக்கு இந்த இயலாமை?, சனாதனம் குறித்து கேவலமான கருத்துகளைத் தெரிவிப்பவர்களுடன் எப்படி அமர்ந்திருக்கிறீர்கள்?. உங்களின் அரசியல் முழுமையடையாமல் இருக்குமா? காங்கிரஸ் இதுகுறித்து என்ன நினைக்கிறது. இது மிகவும் முக்கியமான விஷயம். இதுபோன்ற வெறுப்பு பேச்சு மூலம்தான் திமுகவே உருவாக்கியிருக்க வேண்டும். திமுக குறித்து கேள்வி கிடையாது, காங்கிரஸ் குறித்துத்தான் இந்த கேள்வி இருந்தாக வேண்டும். அவர்கள் தங்களின் அசலான தன்மையை இழந்துவிட்டது" என்றார். 

பன்முகத்தன்மையைக் கொண்டாடுவோம்

தொடர்ந்து பிரதமர் மோடியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் மற்ற அமைச்சர்கள், நாட்டின் தென் மாநிலங்கள் தனி, வட மாநிலங்கள் தனி என்ற ரீதியில் பேசுவது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,"முதலில், இந்தியா ஒரு அழகான நாடாகும். இந்தியா வேறுபாடுகள் நிறைந்த ஒரு நாடாகும். இங்குப் பாலைவனம், கடல், இமயமலை, மேற்குத் தொடர்ச்சி மலை, கங்கை, காவேரி எனப் பல விஷயங்கள் உள்ளது. எனவே, இந்தியாவை தனித்தனியாகப் பார்ப்பது தவறான பார்வையாகும். 

மேலும் படிக்க | மோடியின் உத்தரவாதம் vs ராகுலின் உத்தரவாதம்... மக்கள் அதிகம் நம்புவது எதை? - முடிவுகள் இதோ!

ராமர் பெயர் தொடர்புடைய கிராமங்களைப் பார்த்தோமானால் அது தமிழ்நாட்டில் அதிகம் இருக்கிறது. ராமர் பெயரில் பல கிராமங்கள் அங்கு இருக்கின்றன. அப்போது எப்படி அதனை தனித்தனி என்று நீங்கள் சொல்வீர்கள்?. ஆனால் இந்தியாவில் பல வேற்றுமைகள் உண்டு. நாகாலாந்து பஞ்சாப் போல் இருக்காது, குஜராத் காஷ்மீர் போன்று. பன்முகத்தன்மைதான் நமது பலம். நாம் இந்த பன்முகத்தன்மையைக் கொண்டாட வேண்டும். இந்தியா என்னும் பூங்கொத்தில் இருக்கும் ஒவ்வொரு பூக்களும் மலரும் அளவுக்கு நம்மிடம் தரம் உள்ளது, இது நடக்க வேண்டும்" என்றார். 

ஒரே மொழி, ஒரே மதம்... பிரதமர் கருத்து

மேலும், பாஜக 400 தொகுதிகளை வென்று ஆட்சிக்கு வந்தால் நாட்டை ஒரே மொழி, ஒரே மதம் கொண்ட நாடாக மாற்றிவிடும் என காங்கிரஸ் கட்சியின் முன்வைக்கும் குற்றச்சாட்டு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,"ஒருவர் ஐநா சபைக்குச் சென்று முதல்முறையாக அங்கு உலகின் மூத்த மொழியான தமிழைப் புகழ்ந்து பேசியவரை நோக்கி, எப்படி இத்தகைய குற்றச்சாடை வைக்க முடியும் என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. 

நான் மற்ற மாநிலங்களின் உடைகளை அணிந்தால், அதிலும் அவர்களுக்கு பிரச்சினை. அவர்களுக்கு நாட்டை ஒற்றை அமைப்பில் போட வேண்டும் என்ற நோக்கம். நாம் பன்முகத்தன்மையை வணங்குகிறேன், பன்முகத்தன்மையைக் கொண்டாடுகிறேன். நான் எல்லோருக்கும் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன், நான் முன்னரே சொன்னதுபோல், ஒருவர் மருத்துவராகவோ, பொறியாளராகவோ ஆக வேண்டும் என்றால், ஏன் அவர்களால் தங்களின் சொந்த மொழியில் அதனைப் படிக்கக் கூடாது... நான் தாய்மொழியை வணங்குகிறேன், அதன் முக்கியத்துவத்தையும் அதிகரித்துள்ளேன்" என்றார். 

சமீபத்தில் நான் கேமர்களான இந்த குழந்தைகளுடன் அமர்ந்திருந்தபோது, ஒருவரிடம் நான் சொன்னேன், நீ கையெழுத்துப் போடும் போதெல்லாம் உன் தாய்மொழியில் கையெழுத்துப் போடு. அதன் மூலம் பெருமைப்படு என்றேன். நான் பன்முகத்தன்மையைக் கொண்டுவர முயல்கிறேன். அவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டும் என்பதால் செய்கிறார்கள். அவர்களால் வேறு என்ன முடியும்?" என்றார். 

மேலும் படிக்க | ஒரே நாடு, ஒரே தலைவர் என வழிநடத்தப் பார்க்கிறார் மோடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News