தாய்லாந்தில் ஆசியன் உச்சிமாநாட்டின் போது மியான்மர் ஆளுங்கட்சியின் தலைவர் ஆங் சான் சூகியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு..!
மூன்று நாள் அரசு முறை பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி மியான்மரின் ஆளுங்கட்சி தலைவர் ஆங் சான் சூகியை சந்தித்து பேசினார். தாய்லாந்தில் நடைபெறும் 16-வது ஆசியான் கூட்டமைப்பு மாநாடு, 14வது கிழக்காசிய மாநாடு, 3வது பிராந்திய விரிவான கூட்டமைப்பு மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து சென்றுள்ளார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு நடைபெற்றது. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியானில் இடம்பெற்றுள்ள 10 நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவுகளில் எட்டப்பட்டுள்ள மேம்பாடு குறித்து இந்த உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இந்த மாநாட்டிற்கு பிரதமர் மோடி மற்றும் தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான்-ஓ-சா கூட்டாக தலைமை தாங்கினர். ஆசியான் நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என தமது உரையில் குறிப்பிட்ட பிரதமர் மோடி, கிழக்கு ஆசிய நாடுகள் தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு ஆசியான் மையப்புள்ளியாக உள்ளது என்றார்.
ஆசியான் நாடுகளின் ஒற்றுமையும், பொருளாதார செழிப்பும் இந்தியாவின் நலன்களுக்கு மிகவும் முக்கியமானது என மோடி குறிப்பிட்டார். இந்த மாநாட்டில், சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் தீவிரவாதம் அச்சுறுத்தலாக இருப்பதை மோடி எடுத்துரைத்தார். ஆசியான் நாடுகளுடன் ஒருங்கிணைந்து தீவிரவாதத்தை முறியடிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மோடி வலியுறுத்தியதாக வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி விஜய் தாக்கூர் சிங் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாங்காங்கில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மாநாட்டின் போது மியான்மரின் ஆளுங்கட்சி தலைவர் ஆங் சான் சூகியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.