மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சே குறித்து பாஜக MP பிரக்யா தெரிவித்துள்ள கருத்துக்கு, ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்!
மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சே ஒரு தேசப்பக்தர் என பாஜக MP பிரக்யா தெரிவித்துள்ளது அவரது RSS மற்றும் BJP கோட்பாடுகளை வெளிப்படுத்துகிறது எனவும் ராகுல் கடுமையாக சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., "பயங்கரவாத பிரக்யா, பயங்கரவாதி கோட்சேவை ஒரு தேசபக்தர் என்று அழைக்கிறார். இது இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு சோகமான நாள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Terrorist Pragya calls terrorist Godse, a patriot.
A sad day, in the history of
India’s Parliament.— Rahul Gandhi (@RahulGandhi) November 28, 2019
மற்றொரு பதிவில் அவர் குறிப்பிடுகையில்., "அவர் என்ன சொல்கிறார்.... அதுதான் RSS மற்றும் பாஜக-வின் உணர்வும் கூட. அதை மறைக்க முடியாது. அந்த பெண்ணுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி எனது நேரத்தை நான் வீணடிக்க தேவையில்லை என நினைக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று பாராளுமன்றத்தில் பிரக்யா வர்ணித்ததை அடுத்து ராகுலின் இந்த பதிவு தற்போது வெளியாகியுள்ளது. இதனையடுத்து போபாலில் இருந்து முதல் முறையாக MP-யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரக்யா தாகூர் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மேலும்., பிரக்யா தாகூரின் கருத்துக்கள் சீற்றத்தைத் தூண்டியிருப்பதாகவும், பாஜக-வின் இழிவான வெறுப்பு அரசியலை வெளிப்படுத்துகிறது எனவும் பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இதுகுறித்து பாஜக செயல் தலைவர் ஜே.பி.நடா தெரிவிக்கையில்., "பிரக்யா சிங் தாக்கூர் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவிலிருந்து நீக்கப்படுவார் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம், இந்த அமர்வில் அவர் பாஜக நாடாளுமன்றக் கட்சி கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும்., "பாராளுமன்றத்தில் நேற்று அவர் கூறிய கருத்து கண்டிக்கத்தக்கது. அத்தகைய கருத்து அல்லது சித்தாந்தத்தை பாஜக ஒருபோதும் ஆதரிக்காது" என்றும் நாடா குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது பிரக்யா தாகூர் பாஜக-வில் இருந்து அவரது சர்ச்சைகுறிய கருத்திற்காக நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது.