பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது!
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியதை அடுத்து, நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசு கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்புகளில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதா மத்திய அமைசரவையில் ஒப்புதல் பெற்றது. பின்னர் நேற்று முன்தினம் நாடாளுமன்ற மக்களவையில் அம்மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
Rajya Sabha passes the Constitution (124th Amendment) Bill, 2019 with 165 'ayes'. The bill will provide reservation for economically weaker section of the society. pic.twitter.com/JFLlIfwjOk
— ANI (@ANI) January 9, 2019
இதையடுத்து, நேற்று மாநிலங்களவையில் மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.
அப்போது, மசோதாவை தேர்வுக்குழு ஆய்வுக்கு அனுப்பக் கோரும் தீர்மானத்தை திமுக எம்.பி. கனிமொழி தாக்கல் செய்தார். தனது தீர்மானம் மீது முதலில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். அவரது கோரிக்கையை இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் டி.ராஜாவும் ஆதரித்தார்.
ஆனால், விவாதத்தை முடித்த பின்னரே தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடத்தப்படும் என சபை துணைத்தலைவர் ஹரிவன்ஸ் நாராயண் சிங் தெரிவித்தார். மசோதா மீதான விவாதத்தை தொடர்ந்து, இரவு 10 மணிக்கு மேல், மசோதா மீது ஓட்டெடுப்பு நடைபெற்றது. அதில், 165 உறுப்பினர்களின் ஆதரவுடன் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது. அதிமுக, திமுக, ராஷ்டிரீய ஜனதாதளம், பிஜூ ஜனதாதளம் ஆகிய கட்சிகளை சேர்ந்த 7 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
திமுக எம்.பி., கனிமொழி கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கொண்டு வந்த தீர்மானமும் தோல்வியை தழுவியது.
இதன்மூலம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொதுப்பிரிவினர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது. இதையடுத்து, குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பி வைக்கப்படும். குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த பின்னர் சட்ட வடிவம் பெறும்.