Lok Sabha Elections: 2024 மக்களவைத் தேர்தலில் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடந்துமுடிந்து விட்டன. ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்த நிலையில், ஏப்ரல் 26 ஆம் தேதி கேரளா உட்பட சில மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்தது. சில தொகுதிகளில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவே நடந்துமுடிந்துவிட்ட நிலையில், சில தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்களே அறிவிக்கப்படாத நிலையும் உள்ளது. அதில் உத்தர பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி தொகுதிகளும் அடங்கும். காங்கிரஸ் கட்சி இன்னும் இத்தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
சனிக்கிழமை மாலைக்குள் இத்தொகுதிகளில் யார் போட்டியிடுவார்கள் என்ற அறிவிப்பு வரும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான எந்த வித அறிவிப்பும் இன்னும் வரவில்லை. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வதேரா உத்தரபிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு பதிலாக பிரியங்கா கட்சிக்காக நாடு முழுவதும் பிரச்சாரம் செய்வதில் கவனம் செலுத்துவார் என்று பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரியங்கா ரேபரேலி தொகுதியிலிருந்து போட்டியிடுவார் என பரவலாக காகிரஸ் கட்சி வட்டாரங்களில் கூறப்பட்டு வந்தது. தற்போது அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என இன்னும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை என்றாலும், இது சாத்தியம் என தோன்றுகின்றது. பிரியங்கா காந்தி வதேரா இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமேதியில் ராகுல் களம் காண்பாரா?
காங்கிரசின் இரு கோட்டைகளாக கருதப்படும் அமேதி மற்றும் ரேபரேலியின் காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்த ஊகங்களுக்கு மத்தியில், பிரியங்காவின் சகோதரர் ராகுல் காந்தியும் உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட வாய்ப்பில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மக்களவைத் தேர்தலின் ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவில் மே 20ம் தேதி அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. ஐந்தாம் கட்ட தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய மே 3ம் தேதி கடைசி நாள். ஆகையால் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் இந்த தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அமேதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் காந்தி தோல்வியடைந்தார். ரேபரேலி தொகுதியில் ராகுல்-பிரியங்கா காந்தியின் தாயார் சோனியா காந்தி போட்டியிட்டார். இருப்பினும், சோனியா காந்தி மக்களவைத் தேர்தல் போட்டியில் இருந்து விலகி மாநிலங்களவை உறுப்பினரானார்.
ஏப்ரல் 29 அன்று, காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி (CEC) கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முடிவு செய்ய அதிகாரம் அளித்ததாகக் கூறப்படுகிறது. உத்திரபிரதேச காங்கிரஸ் பிரிவு இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ராவை நிறுத்துமாறு கட்சியின் தலைமைக்கு வலியுறுத்தியுள்ளது. ஆனால், காந்தி குடும்பத்தினர் இதில் ஆர்வம் காட்டவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப் பிரதேச மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. உத்தரப் பிரதேசத்தில் 80 தொகுதிகளில் 17 தொகுதிகளை காங்கிரஸ் பெற்றுள்ளது. மீதமுள்ளவை சமாஜ்வாதி கட்சி மற்றும் பிற கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு நிறைந்த தொகுதிகளாக கருதப்படும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கே இன்னும் அக்கட்சி வேட்பாளர்கள் பற்றிய முடிவை எடுக்காதது தொண்டர்களிடையே பெரும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ