நடுவண் அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் நாள் இரவு ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தது. மேலும் கறுப்புப்பணத்தை ஒழிக்க தான் இந்த அறிவிப்பு என நடுவண் அரசு தெரிவித்தது. ஆனால் நேற்று பண மதிப்பு நீக்கம் பற்றி இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டது, அதில் 99.3% நோட்டுக்கள் வங்கிக் கணக்குகளில் திரும்ப வந்துவிட்டன. ரூ.10,700 கோடி மட்டுமே வரவில்லை என்று தெரிவித்தது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கைக்கு பின்னர் எதிர்கட்சிகள் மத்திய அரசை குற்றசாட்டி வருகிறது. இந்நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பண மதிப்பு நீக்கம் குறித்து மத்திய அரசை கடுமையாக சாடினார். அவர் கூறியதாவது,
பண மதிப்பு நீக்கம் என்பது ஒரு மிகப்பெரிய சீரழிவு, மிகப்பெரிய ஊழல். ஏழை மக்களிடம் இருந்து எடுத்து, பணக்காரர்களுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் கொடுக்கப்பட்டது. இதனால் மக்களுக்கு ஏற்ப்பட்ட சிரமத்துக்கு யார் பதில் சொல்வது. பிரதமர் மோடி தான் பதில் சொல்லவேண்டும். ஆனால் அவர் எதுக்கும் பதில் அளிப்பதில்லை.
கடந்த 60, 70 ஆண்டுகளில் யாரும் செய்யாததை தான் செய்துவிட்டதாக பிரதமர் மோடி அவர்கள் கூறுவது உண்மை தான். ஏனென்றால், அவரின் இந்த செயலால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்தது. பல உயிர்கள் பலியாகின. மக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். இதுவரை நாட்டில் எந்த அரசும் செய்யாத செயலை இவர் செய்துள்ளார் என கடுமையாக தாக்கி பேசினார்.