பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவி... தேர்வு எழுத அனுமதிக்காத அவலம் - பகீர் சம்பவம்

National Latest News: கூட்டு பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரை 12ஆம் வகுப்பு தேர்வு எழுத தனியார் பள்ளி நிர்வாகம் அனுமதி வழங்காத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Apr 5, 2024, 04:57 PM IST
  • பள்ளி வகுப்பறையின் சூழல் கெட்டுவிடும் என பள்ளி நிர்வாகம் மாணவியிடம் கூறியுள்ளது.
  • தேர்வு எழுத அனுமதி சீட்டையும் கொடுக்க மறுத்துள்ளது.
  • தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவி... தேர்வு எழுத அனுமதிக்காத அவலம் - பகீர் சம்பவம் title=

National Latest News: ராஜஸ்தான் மாநிலத்தில் அதிர்ச்சி தரக்கூடிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 12ஆம் வகுப்பு மாணவியை பள்ளியில் தேர்வெழுத நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதற்கு பள்ளி நிர்வாகம் கூறிய காரணமே பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. நெட்டிசன்கள் அந்த பள்ளியின் மீது தங்களின் கடும் கண்டனத்தையும், கோபத்தையும் பதிவு செய்து வருகின்றனர். 

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு தேர்வு நடைபெற்றிருக்கிறது. அந்த தேர்வை ஒரு மாணவி வருகை புரிந்துள்ளார். அந்த மாணவி கடந்த கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாகி அதில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். கூட்டு பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட அந்த மாணவி 12ஆம் வகுப்பு தேர்வை எழுத முடிவெடுத்துள்ளார். 

'சூழல் கெட்டுவிடும்'

ஆனால், அதற்கு பள்ளி ஆசிரியரகள் அனுமதிக்கவில்லை. அந்த பெண் தேர்வெழுத வந்தால் பள்ளியின் சூழல் கெட்டுவிடும் என கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜஸ்தானின் அஜ்மீர் நகரில் உள்ள அந்த தனியார் பள்ளி, பாதிக்கப்பட்ட அந்த மாணவிக்கு தேர்வின் அனுமதி சீட்டை வழங்கவில்லை என தெரிகிறது. அந்த மாணவி கடந்த நான்கு மாதங்களாக வகுப்பிற்கு வரவில்லை என்பதையும் அவர்கள் காரணமாக கூறியுள்ளனர்.

மேலும் படிக்க | A டூ Z.. கொடி பறக்குது! காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியின் முக்கிய அம்சங்கள் பட்டியல்

அந்த மாணவி வேறு பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவரிடம் இதுகுறித்து பேசியுள்ளார். அவர்தான் குழந்தை உதவி எண்ணை கொடுத்து, அதில் தனது புகாரை தெரிவிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். அதன்பின்னரே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து அஜ்மீர் குழந்தைகள் நல ஆணையம் (CWC) இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ளது. விசாரணைக்கு பின் இச்சம்பவத்திற்கு தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பள்ளி நிர்வாகம் கூறியது என்ன?

இதுகுறித்து குழந்தைகள் நல ஆணையத்தின் தலைவர் அஞ்சலி சர்மா கூறுகையில்,"நான் பாதிக்கப்பட்ட மாணவியிடம் அந்த சம்பவம் குறித்து முழுமையாக கேட்டறிந்தேன். விசாரணை தற்போது தொடங்கியுள்ளது. இப்போதைய முன்னுரிமை என்னவென்றால், மார்ச் மாதத்தில் அந்த மாணவி தவறவிட்ட தேர்வை விரைவில் எழுதுவைப்பதே ஆகும்" என்றார்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் அந்த மாணவியை உறவினர் ஒருவர் உள்பட மொத்தம் 3 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி உள்ளனர். கடும் பாதிப்பில் இருந்து மீண்டு கல்வியை தொடர அந்த மாணவி முயற்சித்துள்ளார். அப்போது அந்த தனியார் பள்ளி, மாணவியை பள்ளிக்கு வர வேண்டாம் என்றும் பள்ளிக்கு வந்தால், பள்ளி வகுப்பறையின் சூழல் கெட்டுவிடும் என்றும் கூறியுள்ளது. மேலும், வீட்டில் இருந்து பாடங்களை பயின்று தேர்வுக்கு தயாராகும்படி கூறியுள்ளது. அதனை ஒப்புக்கொண்ட மாணவி, வீட்டிலேயே பாடங்களை படித்து பொதுத்தேர்வுக்கு தயாராகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

பாழான ஓராண்டு

தேர்வு எழுத அனுமதி சீட்டை வாங்க பள்ளிக்கு வந்தபோது, அந்த பள்ளியில் இருந்து மாணவியை நீக்கிவிட்டதாக நிர்வாகம் கூறியுள்ளது. கூட்டு பாலியல் வன்முறைக்கு பின் தான் பள்ளிக்கு வரக்கூடாது என்று மற்ற மாணவர்களின் பெற்றோர் நிர்பந்தித்ததின் காரணமாக பள்ளி நிர்வாகம் தன்னை பள்ளியில் இருந்து நீக்கியிருப்பதை அந்த மாணவி அப்போதுதான் உணர்ந்துள்ளார். 

மேலும் அந்த மாணவி 10ஆம் வகுப்பு தேர்வில் 79 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், மார்ச் மாதம் தேர்வு எழுதியிருந்தால் அந்த மாணவி சிறப்பாக செய்திருப்பார் என்றும் குழந்தைகள் நல ஆணைய தலைவர் அஞ்சலி சர்மா கூறியுள்ளார். பள்ளியின் இந்த தவறான செயலால் அந்த மாணவியின் ஓராண்டு பாழாகிவிட்டதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | CBSE முக்கிய அறிவிப்பு.. 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் மாற்றம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News