கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததற்கான சான்றுபெற்ற வீடுகளுக்கு GST வரியில்லை என மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!
அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்யும் சில கட்டுமான நிறுவனங்கள் பாதி நிலையிலேயே வீட்டை விற்பனை செய்து வருவதாக புகார்கள் வந்தன. வீட்டை வாங்குபவர்கள் அதற்கான ஜிஎஸ்டியும் செலுத்த வேண்டியிருந்தது.
இந்நிலையில் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றதற்கான சான்று பெறப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் கட்டுமானப் பணி தொடங்கும்போதோ, கட்டுமானம் முடிந்த பின்னும் நிறைவு சான்றிதழ் பெறப்படாமலோ உள்ள வீடுகளை வாங்கினால் ஜிஎஸ்டி தொகை வசூலிக்கப்படும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களுக்கு கீழ் கட்டப்படும் குறைந்தவிலை வீடுகளுக்கான 8 சதவீத ஜிஎஸ்டி-யை, கட்டுமான நிறுவனங்கள் தங்களது வரி வரவிலிருந்து கழித்து கொள்ளலாம் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.