சல்மான் கான் உயிருடன் இருக்க வேண்டுமானால்... வந்தது புதிய கொலை மிரட்டல் - பரபரப்பில் மும்பை போலீஸ்!

Fresh Threat For Salman Khan: மாகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை சம்பவத்தை தொடர்ந்து, தற்போது நடிகர் சல்மான் கானுக்கு புதிய கொலை மிரட்டல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Oct 18, 2024, 09:41 AM IST
  • லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் மீது சந்தேகம்.
  • பாபா சித்திக் வழக்கிலும் அவர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
  • தற்போது புதிய மிரட்டல் செய்தி போலீசாருக்கு வந்துள்ளது.
சல்மான் கான் உயிருடன் இருக்க வேண்டுமானால்... வந்தது புதிய கொலை மிரட்டல் - பரபரப்பில் மும்பை போலீஸ்!  title=

Salman Khan Lawrence Bishnoi Latest News Updates: பிரபல பாலிவுட் நடிகர் சல்மானுக்கு தற்போது புதிய கொலை மிரட்டல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இதுவும் பிரபல கேங்ஸ்ட்ரும் தற்போது சிறையில் இருப்பவருமான லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளிகளிடம் இருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும் இந்த கொலை மிரட்டலை விடுத்தவர்கள் யார், இதன் பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணையில் இறங்கி உள்ளனர். மும்பை போக்குவரத்து காவல்துறைக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்ட செய்தியில் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

அதாவது, சல்மான் கானுக்கும் லாரன்ஸ் பிஷ்னோயிக்கும் இடையில் இருக்கும் பிரச்னையை தீர்க்க சல்மான் கான் பணம் கொடுக்க வேண்டும் என்றும் பணம் கொடுக்காவிட்டால் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கிற்கு நடந்ததை விட மோசமாக அவருக்கு நடக்கும் என மிரட்டல் விடுத்துள்ளனர். 

வாட்ஸ்அப்பில் வந்த அந்த மிரட்டல் செய்தியில்,"இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். சல்மான் கான் உயிருடன் இருக்க வேண்டும் என்றால், லாரன்ஸ் பிஷ்னோய் உடனான பகையை முடிவுக்கு கொண்டு வர அவர் விரும்பினால், 5 கோடி ரூபாய் சல்மான் கொடுக்க வேண்டும். பணம் கொடுக்கவில்லை என்றால், பாபா சித்திக்கின் நிலையை விட அவரது நிலை மோசமானதாக இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார். 

பாபா சித்திக் கொலை

முன்னாள் மகாராஷ்டிரா அமைச்சரும், பல்வேறு பிரபலங்களுக்கு நெருக்கமானவராகவும் அறியப்பட்டவருமான பாபா சித்திக் கடந்த சில நாள்களுக்கு முன்னால் மும்பையில் மூன்று பேரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் பின்னணியில் இதே லாரன்ஸ் பிஷ்னோய் இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன, போலீசார் தரப்பிலும் அவர் மீதுதான் சந்தேகமும் எழுந்துள்ளது. இதுவரை நான்கு பேர் இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் தற்போது சல்மான் கான் மீது கவனத்தை திருப்ப வாய்ப்பிருப்பதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். 

மேலும் படிக்க | Sabarimala: சபரிமலைக்கு செல்வோர் கவனத்திற்கு! புதிய கட்டுப்பாடுகள் அமல்!

தற்போது மும்பை போக்குவரத்து காவல்துறைக்கு வந்துள்ள புதிய கொலை மிரட்டலை அடுத்து, இந்த மெசேஜை அனுப்பியது யார் என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள சல்மான் கானின் வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் சல்மான் கானுக்கு பல்வேறு கொலை மிரட்டல்கள் வந்திருப்பதால் அவர் எப்போதுமே பாதுகாப்பு வளையத்தில்தான் இருக்கிறார். பாபா சித்திக்கின் மரணத்தை தொடர்ந்து அவருக்கான பாதுகாப்பு மேலும் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. எனவே, லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் மீது போலீசார் தீவிர நடவடிக்கையிலும் இறங்கி உள்ளனர். 

லாரான்ஸ் குழுவில் முக்கிய நபர் கைது

குறிப்பாக, லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளிகளில் முக்கிய நபரை நவி மும்பை போலீசார் நேற்று (அக். 17) கைது செய்தனர். சுக்பீர் பல்பீர் சிங் என்ற அந்த நபர் ஹரியானாவில் நவி மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த நபர் சல்மான் கான் கொலை முயற்சியில் சதித்திட்டம் தீட்டுவதில் தொடர்புடையவர் என கூறப்படுகிறது. சல்மான் கானை தாக்குவதற்கு மற்ற கூலிப்படையினரை ஒப்பந்தம் செய்ததும் இவர்தான் என கூறப்படுகிறது. லாரன்ஸ் பிஷ்னோய் - சல்மான் கான் பிரச்னையில் தற்போது இவரின் கைது பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இதனால் அவரிடம் விசாரணையும் தீவிரமாகி உள்ளது. 

சல்மான் கான் வீடு மீது தாக்குதல்

இந்தாண்டின் தொடக்கத்தில், சல்மான் கான் பாந்த்ரா வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தியதை தொடர்ந்து, சல்மான் கானை கொல்ல திட்டம் தீட்டியதாக 18 நபர்கள் மீது நவி மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில்தான் தற்போது சுக்பீர் பல்பீர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் லாரன்ஸ் பிஷ்னோய், அவரது சகோதரர் அன்மோல், சம்பத் நேஹ்ரா, கோல்டீ பிரர், ரோஹித் கோதரா உள்ளிட்ட பிஷ்னோய் குழுவினர் மீதும் வழக்குத் தொடரப்பட்டது. இவர்கள் நீண்ட காலமாக வட இந்தியா முழுவதும் நடந்த குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் ஆவர். பிரபலங்களை அச்சுறுத்துவது உள்ளிட்ட வன்முறைச் செயல்களுக்கு இவர்கள் பேர்போனவர்கள்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் திட்டம் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. சல்மான் கானின் நடமாட்டத்தைக் கண்காணிக்க பிஷ்னோய் கும்பல் 60 முதல் 70 வரையிலான செயற்பாட்டாளர்களை நியமித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நபர்கள் சல்மான் கானின் பாந்த்ரா வீடு, அவரது பன்வெல் பண்ணை வீடு மற்றும் நடிகரின் படப்பிடிப்பு இடங்கள் உட்பட பல்வேறு இடங்களில் உளவு பார்த்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த கும்பல் சிறார்களை துப்பாக்கிச்சூட்டுக்கு பணியமர்த்தியதும் தெரியவந்தது. 

மேலும் படிக்க | சல்மான் கானுக்கு உதவினால் கொல்லப்படுவார்கள்! மிரட்டும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News