தீவிரவாதத்தை ஒடுக்க துல்லியத் தாக்குதல் ஒன்றுதான் வழியா? பல வழிகள் உண்டு என ராணுவத் தளபதி பிபின்ராவத் எச்சரிக்கை...!
பாகிஸ்தானால் தொடுக்கப்படும் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க துல்லியத் தாக்குதல் மட்டும் வழியல்ல என்று ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பேட்டியளித்த அவர், எதிரிக்குப் பாடம் புகட்ட இந்திய ராணுவத்திற்கு மேலும் பல வழிகள் இருப்பதாக எச்சரிக்கை விடுத்தார். அவசியம் ஏற்பட்டால் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பிபின் ராவத், எத்தகைய சூழலையும் சந்திக்க இந்திய ராணுவம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இம்ரான் கான் அரசு உண்மையான முயற்சியை மேற்கொண்டால், இருதரப்பிலும் அமைதி திரும்பும் என்றும் எல்லைத் தாண்டிய தீவிரவாதம் முடிவுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்தார். ஆனால், ராணுவம் மற்றும் உளவுத்துறையின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு பாகிஸ்தான் அரசு நடந்தால் அமைதி என்பது தொலைதூர கனவாகவே இருக்கும் என்றும் பிபின் ராவத் தெரிவித்தார்.