திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேறியது!

எதிர்கட்சிகளின் எதிர்புகளை மீறி திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது!

Updated: Jul 25, 2019, 07:53 PM IST
திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேறியது!

எதிர்கட்சிகளின் எதிர்புகளை மீறி திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது!

முத்தலாக் முறை, தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் மசோதா, கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. மசோதாவின் சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவை நீக்கப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது. எனினும் மாநிலங்களவையில், பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், மசோதா நிறைவேறாமல் நிலுவையில் இருந்தது. 

கடந்த மோடி ஆட்சியில் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டபோதும், எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்பால் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. காங்கிரஸ், திரிணாமூல், திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தின.

சமீபத்தில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், முத்தலாக் தடை மசோதா காலாவதியானது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே, மக்களவையில் முத்தலாக் மசோதாவை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடந்த மாதம் 21-ஆம் தேதி தாக்கல் செய்தார். இந்த நிலையில், இந்த மசோதா மீது இன்று மக்களவையில் விவாதம் நடைபெற்றது.

விவாதத்திற்கு பின்னர், திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சபையின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் விநியோகிக்கப்பட்ட சீட்டுகள் மூலம் வாக்களிப்பு நடைப்பெற்றது. வாக்களிப்புக்கு பின்னர் மக்களவையில் திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

முத்தலாக் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நடப்பு கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றி விட வேண்டும் என்பதற்காக பாராளுமன்ற கூட்டத் தொடர் ஆகஸ்ட் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

முத்தலாக் மசோதாவை இரு அவைகளிலும் நிறைவேற்றி விட்டால், குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று சட்டமாக இயற்றி விடலாம் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ள நிலையில், மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.