லக்னோ: உ.பி., சட்டசபையில் 6-வது கட்டமாக 49 தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச சட்டசபையில் 403 இடங்கள் உள்ளன. அங்கு 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. 5 கட்ட தேர்தல் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், 6-ம் கட்டமாக 49 தொகுதிகளில் வாக்குபதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
உ.பி.,யில், முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த அரசின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, இங்கு, பிப்ரவரி 11-ம் தேதி இருந்து, மார்ச் 8-ம் தேதி வரை, ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.
முலாயம் சிங்கின் சொந்த தொகுதியான அசம்கார் மக்களவை தொகுதி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு உத்தரபிரதேசம்-பீகார் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம்-நேபாள எல்லைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 9 தொகுதியில் சமாஜ்வாதி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி அரசை வீழ்த்தி விட்டு, ஆட்சியை கைப்பற்றியே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு பாரதிய ஜனதா களம் இறங்கி இருக்கிறது.
தேர்தல் நடைபெற உள்ள 49 தொகுதிகளில் சமாஜ்வாதி 40 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. 9 தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகின்றது. பா.ஜ.க., 45 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 49 தொகுதியிலும் போட்டியிடுகின்றது.