#IPL_2018: சென்னையில் கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்.10) நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை பார்க்கவரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Apr 10, 2018, 06:44 AM IST
#IPL_2018: சென்னையில் கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு! title=

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்.10) நடைபெறும் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை காண வரும் பார்வையாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.  சுமார் 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, போராட்டம் வலுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் சென்னையில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்தக்கூடாது, இதனால் தமிழக இளைஞர்களின் போராட்டம் திசை திருப்பப்படும் என ஐ.பி.எல்-க்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன. இதையும் மீறி போட்டி நடத்தப்பட்டால், மைதானத்தில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இதன் விளைவாக சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும்போது மைதானத்துக்கு வெளியேயும், உள்ளேயும் 100 ஆய்வாளர்கள், 200 உதவி ஆய்வாளர்கள் உள்பட சுமார் 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். 

இரண்டு கூடுதல் ஆணையர்கள், 3 இணை ஆணையர்கள், 13 துணை ஆணையர்கள், 29 உதவி ஆணையர்கள் ஆகியோர் பாதுகாப்பைக் கண்காணிக்கின்றனர். மேலும் கமாண்டோ படையின் ஒரு அணியும் அதி தீவிரப் படையின் 4 குழுக்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்த நிலையில் மைதானத்தில் பேனர்கள் மற்றும் கொடிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை சேப்பாக்கம் மைதான நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், ரசிகர்கள் அனைவரும் முறையான பரிசோதனை பெற்றே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். 

தேசியக்கொடிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ரசிகர்கள் நடந்துகொள்ளக்கூடாது. செல்போன், பைகள், பட்டாசு, பைனாகுலர், கார் சாவிகள், கண்ணாடி பொருட்கள், குடிநீர் பாட்டில்கள் போன்றவை உள்ளே கொண்டுவர அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். 

இதை தொடர்ந்து, யாரையும் புண்படுத்தும் வகையில் முழக்கங்கள் எழுப்பக் கூடாது எனவும் விதிகளை மீறி நடந்து கொண்டாலோ, மைதானத்தில் பொருட்களை வீசினாலோ கைது செய்யப்படுவர்" என சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர அருகில் உள்ள பறக்கும் ரெயில் நிலைய பகுதிகளிலும், தண்டவாளங்களிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள். போட்டியை காணவரும் ரசிகர்களை யாரேனும் தடுத்து வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.

அந்த பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த பகுதியில் எந்தவித போராட்டங்களுக்கும் அனுமதி இல்லை.

Trending News