அன்புள்ள மக்களே... உலகம் மாறிவிட்டதா? மாற்றப் பட்டதா?..

சுத்தமான பழக்க வழக்கமாக இருக்கட்டும், நல்ல உணவு பழக்கம்,  ஆரோக்கியமான வாழ்கை முறை எதுவானாலும் ஒருவர் மற்றொருவருக்கு உந்துதலாக இருக்க வேண்டும்!!

Written by - Vanathi Giriraj | Last Updated : Mar 15, 2020, 12:18 PM IST
அன்புள்ள மக்களே... உலகம் மாறிவிட்டதா? மாற்றப் பட்டதா?.. title=

சுத்தமான பழக்க வழக்கமாக இருக்கட்டும், நல்ல உணவு பழக்கம்,  ஆரோக்கியமான வாழ்கை முறை எதுவானாலும் ஒருவர் மற்றொருவருக்கு உந்துதலாக இருக்க வேண்டும்!!

இந்தியா வடக்கே இமய மலையும், மீதி மூன்று திசைகளிலும் கடல் சூழ்ந்த தீபகற்பம் என்று பள்ளிப் பருவத்தில் படித்திருக்கிறோம். இப்போதும் இந்தியா இப்படித்தான் இருக்கிறது. ஆனால் ஏன் இப்பொழுதெல்லாம் வடக்கை நினைத்தால் சீனாவின் அத்து மீறல்களும், மேற்கை நினைத்தால் பங்களாதேஷ் ரோஹிங்யாக்களின் நினைவும், தெற்கை நினைத்தால் இலங்கை தமிழருக்கு இழைக்கப்பட்ட அனீதியும், மேற்கை நினைத்தால் பாகிஸ்தானின்  பயங்கரவாதமும் ஏன் நினைவுக்கு வருகிறது.

மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது போல ஒரு நாட்டிற்கும் அதன் சராசரி குடிமகனுக்கும் எழுந்துள்ள சவால்களின் தன்மைகள் மாறிவிட்டன. 

சரி, எல்லையில்தான் பிரச்சனை. நாடு, ராஜ்ஜியம் என்று இருந்தால் அண்டை அயல் நாடுகள் தொல்லை தரும் என்று நினைத்தால், குடிக்கும் தண்ணீரில் தரம் இல்லை. அப்படியே குடிக்க முடியாது, சுவாசிக்கும் காற்றில் சுத்தம் இல்லை, மாறாக மாசு இலவசமாக கிடைக்கிறது. காற்றை சுத்தப்படுத்தும் கருவி தேவையாக இருக்கிறது. அல்லது முகத்தில் முகமூடி அணிந்து காற்றை வடிகட்டி சுவாசிக்க வேண்டி இருக்கிறது.

எங்கு தவறு நடந்தது?  ஒரு இடமா…. இரண்டு இடமா? எத்தனையோ இடங்களில் எத்தனையோ விதங்களில்  நடந்த தவறுகள் இன்று நமக்கு தொல்லைகளாக வந்து நிற்கின்றன. அத்தனையும் யோசித்து பார்த்தால் எல்லா தவறுக்கும் காரணமாக யாரை சொல்வது என்று புரியாமல் மனம் சோர்ந்து விடும். ஆனால் ஸ்வீடனை சேர்ந்த 14 வயது கிரெட்டாவிற்கு இத்தனை விஷயங்களையும் உள்வாங்கி சிந்தித்து விடை கண்டு பிடித்து விட்டாள். அதாவது, அத்தனை நாட்டு தலைவர்களும் பொறுப்பாக இருந்திருந்தால் உலகத்திற்கு இந்த நிலை வந்திருக்காது என்று விடை கண்டுபிடித்து விட்டாள். எனவே  விவேகானந்தர் கேட்ட நூறு இளைஞர்களில் ஒருத்தியை போல, உலகத் தலைவர்களை நோக்கி தைரியமாகக் கேட்டாள். ஹவ் டேர் யூ? என்று. உலகை நாசமாக்க என்ன தைரியம் உங்களுக்கு என்று கேட்ட அந்த இளம் இதயத்திற்கு ஆதரவுகள் பெருகியது. ஆனால், பிர்ச்சனைகளுக்கு தீர்வு கிடைத்த்தா? . 

கேள்விகளுக்கு பதில் கூட கிடைத்து விடும். ஆனால் தீர்வு கிடைக்குமா? பதில் வேறு தீர்வு வேறு.  உயிர் வாழ உறுதுணையாக இருந்த பஞ்ச பூதங்களுக்கு பாதகம் செய்து உயிருக்கு உலை வைக்கும் படி செய்தாயிற்று.    
 
ஸ்வீடன் சிறுமி க்ரெட்டாவிற்கு ஒரு தெளிவு வந்தது பாருங்கள். சுவாசிக்கும் காற்று சுத்தம் இல்லை. பருகும் நீர் சுத்தம் இல்லை. வானிலை படு மோசமாக மாறிக் கொண்டிருக்கிறது என்றால் இப்போது செய்ய வேண்டியது, தான் பள்ளிக்கு சென்று கல்வி கற்பது அல்ல, உலகம்  இழந்து கொண்டிருப்பதை  மீட்டு எடுப்பதுதான். அதற்கான தீர்வை  தேட  வேண்டும் என்பதே முதன்மை பணியாக இருக்க வேண்டும் என்று  உணர்ந்து அதற்கான போராட்டத்தில் இறங்கினாள்.

அதுவரை சரிதான்! ஆனால் மாநாடுகளும் , திட்டங்களும்  எந்த அளவுக்கு பயன் தருகின்றன? கோடி கோடியாக பணம்  செலவிடப் படுகிறது. ஒரு முடிவு? ஒரு தீர்மானம்? ஒரு அறிவுரை?... இது போன்ற       எதுவும் இல்லாத உலகளாவிலான மாநாடுகளை நடத்துவதை விட, நம் உள்ளூரின் வருத்தப் படாத வாலிபர் சங்கங்களின் மாநாடுகளே பராவாயில்லை. உள்ளூர் அளவிலாவது சிறிய மாற்றங்களை ஏற்படுத்தும்.

சில நேரங்களில் சிறிய அளவில் துவங்கும் முயற்சிகள்தான் பெரிய மாற்றங்களுக்கு வித்தாக இருக்கும். சிறு துளி பெருவெள்ளம் என்பது போல பலன் தரும். ஒரு மோசமான உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் சீனாவின் ஒரு கடைக் கோடித்  தெருவில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகமெல்லாம் அழிவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. அப்படி ஏதோ ஒரு நாட்டின் ஒரு மூலையில் துவங்கும் ஒரு நல்ல விஷயமும் உலகமெங்கும் பரவி உலகம் முழுவதற்கும்  நன்மை செய்யலாம் அல்லவா?.. அது பிளாஸ்டிக் புறக்கணிப்போ, சக மனிதனை மன்னிப்பதோ எல்லாம் ஒரு நல்ல தீர்வுக்கு வழி வகுக்கும்.
 
அந்த காலத்திலே   கூட நமது போதி தர்மர் சென்றுதான் சீனாவின் கொடூர நோயை கட்டுப் படுத்தினார். அப்படி  ஒரு நோய் சீனாவில் வரப் போகிறது என்றும்  அதை தடுக்காவிட்டால் உலகுக்கே  ஆபத்து என்று இங்கிருந்தபடியே  உணர்ந்து தன் மகனை சீனா தேசத்திற்கு அனுப்பிய அந்த மகாராணி ஒரு பொறுப்பான அரசியாகவும்,  ஒரு அற்புதமான தாயாகவும் வரலாற்றில் இடம் பிடித்து விட்டாள்.  

அது போல எவர் ஒருவர் மனதிலும் ஏதேனும் நல்ல விஷயங்கள் தோன்றினால், அதை உடனே செயல் படுத்துவது நலம். குறைந்த  பட்சம்  வீட்டிலிருந்து துவக்கினால் அது  அவரை சுற்றி உள்ள பத்து பேரையாவது மாற்றும். அது சுத்தமான பழக்க வழக்கமாக இருக்கட்டும், நல்ல உணவு பழக்கம்,  ஆரோக்கியமான வாழ்கை முறை எதுவானாலும் ஒருவர் மற்றொருவருக்கு உந்துதலாக இருக்கும். இப்படி ஒரு கோடி பேர் வீட்டளவில் செய்யும் மாற்றம் பத்து கோடி பேரை  மாற்ற முடியும் என்றால், பத்து  கோடி  பேரின் மாற்றம் நூறு கோடி பேரை மாற்றி விடாதா?  இதற்கான பதில் உங்கள்  மனத்துக்கே  தெரியும். 

Trending News