பாரீசில் உள்ள ஒரு பூனையின் சொத்துமதிப்பு ரூ.1,400 கோடியாகும். அந்த பூனை உலகின் பணக்கார விலங்காக கருதப்படுகிறது!!
நம்ம ஊருல அனைவரும் தைகளின் மனைவி, மகள், பேரன், பேத்தி ஆகியவரின் பெயரில் சொத்துக்கள் வாங்குவது உண்டு. ஆனால், ஒருவர் தனது செல்லப்பிராணியான பூனையின் பெயரில் கோடிக்கணக்கான சொத்துக்களை வாங்கியுள்ளார்.
உலகின் மிகப் பெரிய ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஜெர்மனியை சேர்ந்த கார்ல் லாகெர்பெல்ட். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வாழ்ந்து வந்த இவர் 85 வயதில், கடந்த 19 ஆம் தேதி காலமானார். கார்ல் லாகெர்பெல்ட் செல்லப்பிராணியாக பூனை ஒன்றை வளர்த்து வந்தார். ‘சவ்பெட்’ என பெயர் கொண்ட அந்த பெண் பூனை மீது அவர் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.
கார்ல் லாகெர்பெல்ட் ஒரு பேட்டியின் போது, சட்டம் அனுமதித்ததால் தனது செல்லப்பிராணியான சவ்பெட்டை திருமணம் செய்து கொள்வேன் என்றும், கண்களின் வழியாக தாங்கள் இருவரும் உரையாடிக்கொள்வதாகவும் வேடிக்கையாக கூறினார். மேலும், சவ்பெட்டை தனது வாரிசாக அறிவித்த அவர், தனது இறப்புக்கு பின் தன்னுடைய சொத்தில் ஒரு பகுதி பூனைக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், கார்ல் லாகெர்பெல்ட் மறைவுக்குப் பின், இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் சவ்பெட் பூனை பெயரில் உயில் எழுதப்பட்டிருப்பதாகவும், அதனை நிர்வகிக்க அறங்காவலர்களை நியமித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இதன் மூலம் உலகிலேயே பணக்கார விலங்கு என்ற பெயரை ‘சவ்பெட்’ பூனை பெற்றுள்ளது.