அனைத்திற்கும் லேட்டாக போகிறவரா நீங்கள்... அப்போ இதனை செய்தால் பிரச்னை தீரும்!

Solution For Late Coming: கல்லூரி, அலுவலகம் தொடங்கி தியேட்டர் வரை அனைத்து இடங்களுக்கும் தாமதமாக செல்பவரா நீங்கள், அப்போது இங்கு கொடுக்கப்பட்ட குறிப்புகளின்படி நடந்தால் இந்த பிரச்னை தீரும்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 12, 2024, 07:26 PM IST
  • இது ஒரு தீய பழக்கமாக கூட மாறலாம்.
  • இதனால் பிரச்னைகளும் அதிகமாகலாம்.
  • அதிக பதற்றம் கூட தாமதமாக செல்லும் பழக்கத்தை உண்டாக்கும்
அனைத்திற்கும் லேட்டாக போகிறவரா நீங்கள்... அப்போ இதனை செய்தால் பிரச்னை தீரும்! title=

Solution For Late Coming: நான்கு பேர் கொண்ட ஒரு நட்பு வட்டத்தை நாம் பார்த்தோமானால், அதில் காசு செலவு செய்வதற்கு ஒருவர் இருப்பார், காரோ பைக்கோ வாகனத்தை ஓட்டுவதற்கு ஒருவர் இருப்பார், குழுவாக எங்கே செல்லலாம் என திட்டம் போட இருப்பார்... அதேபோல் நீங்கள் போடும் அத்தனை பிளான்களுக்கும் லேட்டாக வருவதற்கு என ஒருவர் நிச்சயம் இருப்பார்.

நீங்கள் அவரின் வீட்டு வாசலில் இருந்து அழைத்தாலும் கூட இப்போது வந்துவிடுகிறேன் என சொல்லி இருவது நிமிடங்களுக்கு பின்னர்தான் வெளியேவே வருவார். ஒரு படத்திற்கு போவதாக இருந்தாலும் சரி, சாதரணமாக டீ குடிக்கப் போவதாக இருந்தாலும் எதற்கெடுத்தாலும் தாமதமாக புறப்படுவது என்பது அவர்களுக்கு பழக்கமாகியிருக்கும். இதனால், அவர்கள் உங்களிடம் அதிகம் திட்டுவாங்கியிருப்பார்கள், இன்னமும் திட்டு வாங்கிக் கொண்டுதான் இருப்பார்கள். 

ஒருவேளை இதனை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களும் கூட திட்டம் வாங்குபவராக இருக்கலாம். நீங்களும் கூட தாமதமாக செல்லும் பழக்கமுடையவர்களாக இருக்கலாம். இந்த பழக்கம் விளையாட்டுத்தனமாக இருந்தாலும் சில நேரங்களில் பெரிய பிரச்னையை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு நீங்கள் வேலைக்குச் செல்லும் நபராக இருந்தால் தொடர்ந்து தாமதமாக செல்லும்போது உங்கள் சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடிக்கவும் சில இடங்களில் விதிகள் இருக்கின்றன.

மேலும் படிக்க | அம்பானிகளிடம் கற்றுக் கொள்ள வேண்டிய 6 சீக்ரெட்ஸ்...! வாழ்க்கை சும்மா அம்சமா இருக்கும்

இந்த பிரச்னைக்கான காரணங்கள்

ஒருவேளையை தாமதமாக செய்வது ஒருபக்கம் என்றால் இதுபோன்று குறித்த நேரத்தில் சொன்ன இடத்திற்கு வராதது, நேரக் கட்டுப்பாட்டை மதிக்காமல் இருப்பது, அனைத்து விஷயங்களையும் தள்ளிப்போடுவது உள்ளிட்ட பிரச்னைகள் மறுபக்கம் மிகவும் தீவிரமான பிரச்னைகளுக்கு இட்டுச்செல்லும். 

ஆனால், சிலர் தாமதமாக வருவதற்கு இவை மட்டும் காரணங்கள் இல்லை. அதிகம் கவலை மற்றும் பதற்றத்தோடு இருந்தாலும் இதுபோன்று நேரம் தவறும் பழக்கம் ஏற்படும். ADHD கூட இவற்றுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதுமட்டுமின்றி ஒரு செயலில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தாலும் சரி, ஈடுபாடே இல்லாமல் போனாலும் சரி இதுபோன்று தாமதமாக செல்லும் பழக்கம் ஏற்படும். நீங்கள் அதிக ஈடுபாட்டுடன் ஒரு விஷயத்தை நினைக்கும்போது, அதில் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படலாம். 

பதற்றமே வேண்டாம்

அதாவது நீங்கள் காலையில் 5.30 மணிக்கு வீட்டில் இருந்து பணிக்காக லாக்-இன் செய்ய வேண்டும் என வைத்துக்கொள்வோம். முந்தைய நாள் இரவு 10.30 மணிக்கு தூங்குகிறீர்கள் என்றும் வைத்துக்கொள்வோம். அப்போது, காலையில் 5.30 மணிக்கு எழுந்திருக்கே வேண்டும் என அளவுக்கு அதிகமாக நினைத்து நீங்களே உங்களை பதற்றத்திற்கு உள்ளாக்கிக் கொண்டால் காலையில் எழுந்திருக்க தாமதமாகவும் வாய்ப்பிருக்கிறது. 

இந்த பதற்றம் கூட உங்களை தாமதமாக லாக்-இன் செய்ய வைக்கலாம். அதேநேரத்தில் எவ்வித ஈடுபாடும் இல்லாமல் இருந்தாலும் கூட உங்களால் சரியான நேரத்திற்கு செய்ய முடியாது. எனவே, அதனை மனதில் வைத்துக்கொள்ளலாமே தவிர உங்களை நீங்களே பதற்றத்திற்கு ஆளாக்கிக்கொள்ள கூடாது. எனவே, இப்படி தாமதமாக ஒரு செயலை செய்யாமல் இருக்க, செய்ய வேண்டிய சில விஷயங்கள் குறித்து இங்கு காணலாம். 

பிரச்னைக்கான தீர்வுகள்...

முதலில் எந்த வேலைகளை எப்போது செய்ய வேண்டும் என முன்னுரிமை அடிப்படையில் அந்த வேலையில் கவனம் செலுத்தவும். சின்ன சின்ன இலக்குகளையும், கடைசி நேரத்தையும் குறித்துக்கொண்டு அதில் விரைவாக செயல்பட முயற்சிக்கவும். அலாரம், ரிமைண்டர் போன்று மொபைல்களில் நினைவூட்டலுக்கான செயலிகளையும் உதவிக்கு வைத்துக்கொள்ளுங்கள். 

ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும் முன்கூட்டியே திட்டமிடுங்கள். நாளைக்கு ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் முந்தைய நாளே அதுகுறித்து யோசனை செய்து, எப்போது புறப்பட்டால் விரைவாக போகலாம் என திட்டமிட்டு அதற்கு ஒரு மணிநேரம் முன் செல்ல திட்டமிடுங்கள். இவை அனைத்தையும் விட உங்களுக்கு இதுகுறித்து அதிக பதற்றமும், நிறைய சந்தேகங்களும் இருக்கிறது என்றால் மருத்துவ நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுவதே நல்லது. 

மேலும் படிக்க | இஷா அம்பானி vs நிதா அம்பானி... பாரம்பரிய காஸ்ட்யூமில் போட்டிப்போடும் தாயும் மகளும்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News