கொரோனா தாக்கம்: உயிரை காக்க உணவுக்காக 800 கி.மீ தூரம் பயணம் செய்யும் கூலி தொழிலாளர்கள்

தனது 8 தொழிலாளர்களுடன் 800 கி.மீ தூரத்தில் உத்தரபிரதேசத்தின் ராய் பரேலியில் உள்ள தனது வீட்டிற்கு புறப்பட்டார். தற்போது அவர் ஹரித்வாரை அடைந்துவிட்டார். இன்னும் 700 கி.மீ தூரம் அவர்களது பயணம் இருக்கிறது.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Mar 26, 2020, 01:23 PM IST
கொரோனா தாக்கம்: உயிரை காக்க உணவுக்காக 800 கி.மீ தூரம் பயணம் செய்யும் கூலி தொழிலாளர்கள்
Photo: REUTERS

ஹரித்வார்: கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுக்க நாடு முழுவதும் திடீரென லாக்-டவுன் செய்யப்பட்டதால், யாரும் வெளியில் போக முடியாத சூழல் ஏற்பட்டது. அதேநேரத்தில் டெஹ்ராடூனில் உள்ள கூலி தொழிலாளர்களுக்கு சாப்பிட கொடுத்தாக வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. ஆனால் அங்கு அருகில் எந்த கடையும் இல்லை.  கூலி தொழிலாளர்களை வழிநடத்தும் மூரத் லால், தனது 8 தொழிலாளர்களுடன் 800 கி.மீ தூரத்தில் உத்தரபிரதேசத்தின் ராய் பரேலியில் உள்ள தனது வீட்டிற்கு புறப்பட்டார். தற்போது அவர் ஹரித்வாரை அடைந்துவிட்டார். இன்னும் 700 கி.மீ தூரம் அவர்களது பயணம் இருக்கிறது. 

இதுக்குறித்து பேசிய மூரத் லால், "நாங்கள் கடந்த இரண்டு நாட்களில் ஒரு முறை மட்டுமே சாப்பிட்டோம். நாங்கள் ஒவ்வொரு நாளும் சம்பாதிக்கும் பணத்தில் தான் சாப்பிடுவோம். எங்கள் 8 பேரிடம் சேர்ந்து மொத்தமாக 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருக்கிறது. நாங்கள் வழியில் நிறுத்தப்படாவிட்டால், வீட்டிற்குச் செல்ல இன்னும் 5 நாட்கள் ஆகலாம். ஆனால் இப்போது நாம் திரும்பிச் செல்ல முடியாது. டெஹ்ராடூனில் எங்களுக்கு எதுவும் மிச்சமில்லை என்று வருத்தத்துடன் கூறினார்.

தினசரி உணவுக்கு திண்டாட்டம்:
30 வயதான முராத் லால் உட்பட எட்டு தொழிலாளர்களும் டெஹ்ராடூனில் பிளம்பர், எலக்ட்ரீக், தச்சு வேலை போன்ற வேலைகளை செய்து உள்ளனர். அனைவரும் புதன்கிழமை இரவு வரை 90 கிலோமீட்டர் பயணம் செய்து ஹரித்வாரில் உள்ள லக்சரை அடைந்துள்ளனர். இதேபோல், மீரட்டில் கூலிவேலை செய்யும் அங்கித் குமார் இரவு முழுவதும் சுமார் 10 மணி நேரம் பயணம் செய்து 135 கி.மீ தூரத்தை கடந்து சஹரன்பூரில் உள்ள தனது வீட்டை அடைந்தார்.

குழந்தைக்கு உணவளிக்க எதுவும் இல்லை.. எப்படி வாழ்வது?
இதேபோல், ருத்ராபூரில் வசிக்கும் மதன், தனது 5 மாத குழந்தையுடன் பரேலியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றார். ஆனால் காவல்துறையினர் அவரை பாதிவழியில் திருப்பி அனுப்பினர். 

அவர் கூறியது, "கடந்த 5 நாட்களாக என்னிடம் பணம் இல்லை. ஏனெனில் எந்த வேலையும் கிடைக்கவில்லை. என் மனைவி மற்றும் குழந்தைக்கு உணவளிக்க என்னிடம் எதுவும் இல்லை எனக் கூறினார். 

ஏற்கனவே நான்கு-ஐந்து நாட்கள் சில மாநிலங்களில் லாக்-டவுன் உத்தரவு போடப்பட்டிருந்தாலும், ஆங்காங்கே வெளியேற்றமும் இருந்தது. ஆனால் செவ்வாய்க்கிழமை இரவு பிரதமர் நாடு முழுவதும் 21 நாள் முழுமையான லாக்-டவுன் அறிவித்தபோது, ​​இந்த மக்களின் நம்பிக்கைகள் முற்றிலும் உடைந்தது. செவ்வாய்க்கிழமை இரவு முதல், ஏராளமான மக்கள் தங்கள் படுக்கைகளை கட்டிக்கொண்டு உ.பி., பீகார், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய இடங்களில் உள்ள வீடுகளுக்கு புறப்பட்டனர். 

உயிருடன் திரும்புவோம்:
அப்படி தனது சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் சொல்வது , "நாங்கள் இங்கே தங்கியிருந்தால், கொரோனாவுக்கு முன்பு பசியால் இறந்து விடுவோம் என்று தங்கள் சூழல்நிலையை வேதனையுடன் கூறினார்கள். நாங்கள் இப்போது வெளியேறினால் தான், குறைந்தபட்சம் நாங்கள் எங்கள் கிராமத்தூக்கு  உயிருடன் அடைவோம் என்றுக் கூறினார்கள்.