உலகின் மிக உயரமான ஹோட்டல் என தற்பெருமை கொண்ட ஹோட்டல் இன்று துபாயில் திறக்கப்பட்டது. இது ஈபிள் கோபுரம் விட 100 அடி உயரமானது.
உயரமான கட்டிடங்களின் மீது துபாய் மன்னருக்கு அப்படியென்ன காதலோ தெரியவில்லை. வானைத் தொடும் அளவுக்கு ஏகப்பட்ட உயரமான கட்டிடங்கள் அங்கு உள்ளன. 828 மீட்டர் உயர புர்ஜ் கலிபா உட்பட பல கட்டிடங்கள் துபாயின் அடையாளமாக உள்ளன. அந்த வரிசையில் இன்னொரு உயரமான கட்டிடம் அங்கு கட்டப்பட்டுள்ளது.
உலகின் மிக உயரமான ஓட்டல் என்ற பெருமையுடன் சேக் சையத் சாலையில் அமைந்துள்ள இந்த ஓட்டலில் 528 அறைகள் உள்ளன. 75 மாடி கொண்ட இந்தக் கட்டிடம் 356 மீட்டர் உயரம் கொண்டது. 355 மீட்டர் உயரத்தில் அங்குள்ள, மேரியாட் மார்க்குயிஸ் ஓட்டலை விட இது ஒரு மீட்டர் அதிக உயரம் கொண்டது.
ஜிவோரா என்று பெயரிடப்பட்டுள்ள, இந்த தங்க நிறத்தில் மின்னும் ஓட்டல் இன்று திறக்கப்படுகிறது. முதல் விருந்தினரை ஓட்டல் நிர்வாகத்தினர் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
துபாயில் ஏற்கனவே உள்ள புர்ஜ் அல் அராப் ஓட்டல் 321 மீட்டர் உயரமும், ரோஸ் ரேஹன் ஓட்டல் 333 மீட்டர் உயரமும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.