Tirupati Laddu Controversy Latest News Updates: ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் வெங்கடாசலபதி கோயிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. திருப்பதி லட்டு மற்றும் சாமிக்கு படைக்கப்படும் நைவேத்யம் ஆகியவற்றை தயாரிக்க பயன்படுத்தும் நெய்யில் விலங்குகளின் கொழுப்புகள் சேர்க்கப்பட்டு கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக ஆய்வில் ஒன்றில் பகீர் தகவல் வெளியானது.
மாட்டிறைச்சிக் கொழுப்பு, பன்றி இறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை அந்த நெய்யில் கலக்கப்பட்டதாக அந்த ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் உள்ள இந்து மக்கள் இடையேயும், பக்தர்கள் மத்தியிலும் கடும் அதிர்விலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை மாநில அரசு தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர்சிபி ஆட்சியில்தான் இந்த முறைகேடு நடந்திருப்பதாக தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டி இருந்தார்.
திருப்பதியில் சாந்தி ஹோமம்
தொடர்ந்து, திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளையில் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தனக்கு நெருக்கமானவர்களை தேவஸ்தான நிர்வாகிகளாக வைத்துக்கொண்டு அதனை தனது அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக்கொண்டார் என சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டறிந்து விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வு குழு ஒன்றையும் சந்திரபாபு நாயுடு அமைத்துள்ளார்.
இதை தொடர்ந்து, பல லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தை தயாரிக்க பயன்படுத்த நெய்யில் கலப்படம் நடைபெற்றதால் தோஷம் உண்டாகியிருக்கும் என பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகளால் நம்பப்படுகிறது. இதைத் தொடர்ந்து, திருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்கப்பட்ட இடம், லட்டு விநியோகம் செய்யப்பட்ட இடம் உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று சாந்தி ஹோமம் நடந்தப்பட்டது. இதனால், தோஷம் நீங்கி கோயில் மீண்டும் புனிதத்தன்மையை அடைந்துவிட்டதாக தலைமை அர்ச்சகர் நேற்று கூறியிருந்தார்.
தொடர்ந்து, திருப்பதி லட்டு பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில், நடிகர் கார்த்தி திருப்பதி லட்டு குறித்து நகைச்சுவையாக கருத்து தெரிவித்ததாகவும், அதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் நடிகரும், ஆந்திரா துணை முதல்வருமான பவன் கல்யாண் (Pawan Kalyan) பேசியுள்ளார். விஜயவாடாவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பவன் கல்யாண்,"திரையுலகைச் சேர்ந்தவர்கள் இந்தப் பிரச்னையைப் பற்றி பேச வேண்டும் என்றால், ஒன்று ஆதரவாக பேசவும், இல்லையெனில் அதை தவிர்க்கவும். பக்தர்கள் அனைவரும் ஆழ்ந்த வேதனையில் இருப்பதால் இந்த பிரச்னை குறித்து கேலி செய்ய வேண்டாம்" என்றார்.
பவன் கல்யாண் எச்சரிக்கை
பவன் கல்யாண் மேலும் பேசுகையில்,"லட்டு விவகாரம் குறித்து சிலர் கேலி செய்கிறார்கள். நேற்று நான் ஒரு திரைப்பட விழாவில் பார்த்தேன், ஒருவர் சொல்கிறார்,'லட்டு ஒரு உணர்ச்சிகரமான பிரச்சினை...' என்று... இன்னும் ஒருமுறை கூட அப்படி கூறிவிடாதீர்கள்" என்று பவன் கல்யாண் நடிகர் கார்த்திக்கு எச்சரிக்கை விடுத்தார். "நான் உங்களை நடிகர் என்ற ரீதியில் மதிக்கிறேன், ஆனால் சனாதன தர்மம் என்று வரும்போது, நீங்கள் ஒரு வார்த்தை பேசுவதற்கு முன் 100 முறை யோசிக்க வேண்டும்" என எச்சரிக்கும் தொனியில் பேசியிருந்தார்.
"Don't Say that Laddu is a sensitive issue, I respect you as an actor..."
- AP Deputy CM #PawanKalyan counter to #Karthi over his comments on #TirumalaLaddu
pic.twitter.com/gDaTPR9EUu— Karthik Ravivarma (@Karthikravivarm) September 24, 2024
முன்னதாக, கார்த்தி (Actor Karthi) நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள மெய்யழகன் திரைப்படத்தை பிரபலப்படுத்தும் விழா ஹைதராபாத்தில் நேற்று நடந்தது. அந்த விழாவில் நெறியாளர் நடிகர் கார்த்தியிடம் சில மீம்ஸ்களை போட்டுக் காண்பித்தார். அதில் ஒரு மீம்மில்,"எனக்கு லட்டு வேண்டும்" என உள்ளதாக நெறியாளர் வாசித்தார். உடனே கார்த்தி,"லட்டு விவகாரம் மிகவும் உணர்ச்சிகரமானது (Sensitive). எனவே, அதை பேச வேண்டாம்" என நாசுக்காக மறுத்தார். லட்டு குறித்து இங்கு பேச வேண்டாம், அது தேவையில்லை என்பதை உறுதியாக தெரிவித்திருந்தார்.
மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி
இதில் கார்த்தி எதுவும் தவறாக பேசவில்லையே என்றும் லட்டு விவகாரத்தில் தேவையில்லாமல் பேச வேண்டாம் என்பதால் அதை தவிர்க்கவே கார்த்தி முயற்சித்ததாகவும் கார்த்திக்கு ஆதரவாக பலரும் சமூக வலைதலங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக கூறி பவன் கல்யாணிடம் நடிகர் கார்த்தி மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுகுறித்து கார்த்தி அவரது X பக்கத்தில்,"எனது எதிர்பாராத தவறாக புரிந்துகொள்ளப்பட்ட கருத்துக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், உங்கள் மீது பெரும் மரியாதை கொண்டுள்ளேன். வெங்கடேசப் பெருமானின் தாழ்மையான பக்தன் என்ற முறையில், நான் எப்போதும் நம் மரபுகளை பின்பற்றுபவன்" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ