தமிழ் சினிமாவின் 'நீங்காத பிறை' - பாலு மகேந்திராவின் பிறந்தநாள் இன்று

Balu Mahendra Birthday Anniversary: இந்தியாவில் தற்போது பல்வேறு சாதனைகளையும், புகழையும் பெற்ற இயக்குநர்களுக்கு, திரைப்படம் எடுக்க தூண்டுகோலாக இருந்த மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் பிறந்தநாள் இன்று. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sudharsan G | Last Updated : May 20, 2023, 02:45 PM IST
  • இவர் 1939ஆம் ஆண்டில் கொழும்புவில் பிறந்தவர்.
  • இவர் தனது 74 வயதில் உயிரிழந்தார்.
  • இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் இவரும் ஒருவர்.
தமிழ் சினிமாவின் 'நீங்காத பிறை' - பாலு மகேந்திராவின் பிறந்தநாள் இன்று title=

Balu Mahendra Birthday Anniversary: பெரும்பாலும் பாலுமகேந்திராவை ஒரு ஒளிப்பதிவாளராகவே பலராலும் அறியப்பட்டவர். ஆனால் இன்று முன்னணி இயங்குநர்களாக இருக்கும் வெற்றிமாறன், ராம், சீனுராமசாமி, பாலா ஆகியோருக்கு திரைப்படம் இயக்க ஆசிரியராக இருந்தவர் பாலுமகேந்திரா. இவர் ஒளிப்பதிவாளர் மட்டுமின்றி படத்தொகுப்பு, கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு என கலைக்காக தன்னை அர்பணித்தியுள்ளார். குறிப்பாக, இவர் இந்தியாவின் மிக சிறந்த ஒளிப்பதிவாளர் ஆவார்.

பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவு

ஒரு ஒளிப்பதிவாளராக இயற்கையான ஒளிகளைக் கொண்டே சிறந்த காட்சி அனுபவத்தை உருவாக்குவதில் அசாத்தியமான வல்லமை பெற்றிருந்தார் பாலு மகேந்திரா. 'செம்மீன்' இயக்குநரின் 'நெல்லு' திரைப்படம், பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவில் உருவானது. படம் பார்த்தவர்கள் திகைத்து நின்றார்கள். கேரளத்தில் இருந்து கன்னட தேசத்தில், படமொன்றை ஒளிப்பதிவு செய்து இயக்கினார். அந்தக் கன்னடப் படத்தின் பெயர் 'கோகிலா' பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவு நுட்பங்களை கொண்டாடினார்கள் ரசிகர்கள்.  

சிறந்த இலக்கிய வாசகர்

படைப்பாளியாக மட்டுமல்லாமல் சிறந்த வாசகராகவும் இருந்தார், பாலு மகேந்திரா. அவருடைய படங்கள் சினிமாவின் ஜிகினாக்களையும் மசாலாக்களையும் முழுமையாகத் தவிர்த்திருந்ததற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம். தமிழிலும் ஆங்கிலத்திலும் வந்த முக்கியமான இலக்கிய நூல்களை வாசித்து அவற்றைத் திரைக்கதையாக்கவும் திரைவடிவம் கொடுக்கவும் முயற்சித்துவந்தார். 

சில முயற்சிகள் வெற்றிபெறவும் செய்தன. இருந்தாலும் ஒரு நல்ல சிறுகதையையோ நாவலையோ அதற்கு இணையான நல்ல சினிமாவாக மாற்ற முடியாது என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். ஏனென்றால்,'ஒரு கதை ஒரு நல்ல நாவலாக உருப்பெற்றுவிட்டால் அக்கதை அதற்கான மிகச் சரியான ஊடகத்தை ஏற்கெனவே கண்டடைந்துவிட்டது. அதை இன்னொரு ஊடகமான சினிமாவுக்கு அதே அளவு சிறப்புடன் கடத்த முடியாது' என்று அவர் கூறியிருப்பதாக அவருடைய தலைசிறந்த சீடர்களில் ஒருவரான இயக்குநர் வெற்றிமாறன் அடிக்கடி குறிப்பிடுவார்.

இருந்தாலும் இலக்கியத்தையும் திரை ஊடகத்தையும் இணைக்கும் இடைவிடாக் கண்ணியாகத் தொடர்ந்து செயல்பட்டுவந்தார். வாசிப்பு பழக்கம் இருப்பவர்களையே தனது உதவி இயக்குநர்களாகச் சேர்த்துக்கொண்டார். அவரிடம் உதவியாளராகச் சேர விரும்புபவர்களுக்கு அளிக்கப்படும் முதல் பணி முக்கியமான நவீன இலக்கிய நூல்களைப் படித்து அது பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதும் நாவல்களின் அத்தியாயங்கள், சிறுகதைகளுக்குத் திரைக்கதை எழுதுவதும்தான். 

பாலுமகேந்திரா பார்வையில் படங்கள் 

எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி என்றொரு வாசகம் உண்டு. பாலுமகேந்திராவின் படங்கள் அப்படி புதுமாதிரியாக அமைந்து, ரசிகர்களின் இதயம் தொட்டு உசுப்பின. பாலுமகேந்திரா படங்களை பொருத்தவரையில் இசையும் ஒளிப்பதிவும் மனதில் பெரிய தாக்கத்தை  ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். 
இவர் படத்தில்  வரும் காட்சிகளில் உள்ள உணர்வுகளை மிகவும் அழகாகவும் வெளிப்படையாகவும் தெரிய வண்ணங்கள் நிறைந்த ஒளிப்பதிவும் ஒரு காரணம் என்று கூட கூறலாம்.
 
இவரின் திரைப்படம் என்றாலே அதில் வண்ணங்களும் வெளிச்சங்களும் நிறைந்த காட்சிகளாக அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு வண்ணங்கள் மீதும் ஒவ்வொருவரின் பார்வைக் கோணமும் வெவ்வேறாக இருக்கும். பாலுமகேந்திரா படங்களை பார்க்கும்போது வசனங்களை  விடவும் பெரும்பாலும் காட்சிகளை   மட்டும் பயன்படுத்துகிறார். இந்த முறையை  minimalstic  way of  visual talking என்பார்கள்,  அதாவது வசனங்கள் இன்றி காட்சிமொழி  மூலம்  விவரிப்பது என்று கூறப்படுகிறது. 

இன்றைக்கும் இவர்  படங்கள் பல தரப்பினரின் விவாதங்களும் விமர்சங்களும் எழுந்த வண்ணமாகவே உள்ளது. இன்று பல படங்கள் உருவாக பாலுமஹேந்திரா படத்தில் உள்ள ஒரு சில காட்சிகளே கருப்பொருளாக உள்ளது.  மிகைப்படுத்தப்பட்ட நடிப்பும் மிகைப்படுத்தப்பட்ட ஒளியும் இவருக்குப் பிடிக்கவே பிடிக்காத விஷயங்கள். யதார்த்தமான படைப்புகளைத் தந்து, நம்மை என்னவோ செய்துவிடும் திறன், பாலுமகேந்திராவுக்கு கைவந்த கலை. 

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் 23 திரைப்படங்களை இயக்கினார். பாலு மகேந்திரா. அவர் இயக்கிய படங்கள் யதார்த்தத்தையும் இயல்பையும் பதிவு செய்து நிஜ வாழ்க்கைக்கு மிக நெருக்கமான படங்களாக இருந்தன. தமிழ் சினிமாவில் அவரளவுக்கு யதார்த்தத்துக்கு நெருக்கமான படங்களைக் கொடுத்தவர் வேறொருவரில்லை. வணிக சினிமாவில் இயங்கிக்கொண்டே இதைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தார் என்பதுதான் இதில் மிக முக்கியமான அம்சம். இந்தியாவில் உள்ள பல  இயக்குநர்களுக்கு  படம் எடுக்க தூண்டுகோலாக இருந்தார்.

மேலும் படிக்க | பிச்சைக்காரன் 3 வந்தால் என்னவாகும்? கலக்கத்தில் மக்கள்!

மூன்றாம் பிறை 

சீனு மனநலம் பாதிக்கப்பட்ட விஜி என்ற ஒரு பெண்ணை விபச்சார விடுதியில் இருந்து கூட்டிவந்து குழந்தை போல பார்த்துக் கொள்கிறேன். மெல்ல மெல்ல விஜி மீது சீனுவுக்கு காதல் வருகிறது, அவளுக்கு மனநலம் சரியான பின்பு அவளிடம் காதலை பரிமாறி திருமணம் செய்ய எண்ணுகிறான். அவளுக்கு பித்தம் தெளிந்த  பின் சீனு யார் என்ற மறந்து போகிறது.  

காதலை தாண்டி இங்கு, ஒரு தாய் தன்னுடன் இருந்துதான் வளர்த்த ஒரு குழந்தை அவளை விட்டு போகும்  வலியை கமல் மற்றும் ஸ்ரீதேவியை வைத்து கண்ணில் காட்டிருப்பர். இங்குதான் பாலுமஹேந்திராவை  படைப்பாளியாக பார்க்க முடிகிறது.

வீடு 

ஹீரோக்களுக்காக மட்டுமே படம் வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அந்த ஸ்டீரியோ டைப்பை உடைக்கும் விதத்தில் வீடு படம் புதிய கதைகளை கொண்டு உருவாக்கினார், இயக்குநர் பாலு மகேந்திரா.

எந்த ஒரு துணையும் இன்றி ஒரு பெண் எப்படி ஒரு வீட்டை கட்டி முடிக்கிறார் என்பது அந்த படத்தின் கதை. இப்படத்தில் வீடு கட்டும்போது  என்னென்ன எதிர்பார்ப்புகள் இருக்கும்; என்னென்ன சிரமங்கள் இருக்கும்; என்னென்ன இன்பங்கள் இருக்கும் என்பதை பாலு மகேந்திரா மிகத் தெளிவாக கையாண்டு இருப்பார். இப்படத்திற்கு பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவும் இளையராஜாவின் இசை மிகவும் பக்கபலமாக அமைந்திருக்கும். இன்றளவும் இது போன்ற கதைக்களம் அமைவது என்பது அசாத்தியமாகவே உள்ளது.

சதிலீலாவதி

எப்போதுமே இருட்டிலேயே படம் செய்கிறீர்களே உங்களுக்கு நகைச்சுவையாக கமர்சியலாக படம் எடுக்க தெரியாதா? என்று கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் அவர் எடுத்த படம் தான், சதிலீலாவதி. இன்று பல படங்களில் நிறத்தை வைத்து உடல் வைத்து நகைச்சுவை என்ற பெயரில் ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். 

இது மாதிரியான எதுவும் இல்லாமல் அதிகபட்சமாக ஒரு ஏழு நபர்களைக் கொண்டு இரண்டரை  மணி நேரத்தில் நம்மை எவ்வளவு சிரிக்க வைக்க வேண்டுமோ அவ்வளவு சிரிக்க வைத்திருப்பார். பாலு மகேந்திராவின் படைப்புகள் இது ஒரு மாறுபட்ட படைப்பு.

அழியாத கோலங்கள்

ஆண்களின் பதின் பருவங்களில் இயற்கையாக இயல்பாக வரும் வரும் பெண்கள் மீது வரும் காதல், காமம் பற்றிய உணர்வுகளுக்கு காட்சிகள் மூலம் உருவம் கொடுத்த திரைப்படமாகும்.

மறுபடியும்

ரெண்டு பொண்டாட்டி கதைகள் பாலு மகேந்திராவை மிஞசுவதற்கு ஆளே இல்லை எனலாம். இந்தப் படத்தை பார்க்கும் அனைவருக்கும் மனதில் சில கேள்விகள் எழும்பும். அதுவே இந்த படம் ஏற்படுத்தி தாக்கமாகவும் இருக்கும். ஒரு திருமண வாழ்விற்கு பின்பு மீண்டும் ஒரு வாழ்வு இருக்கக் கூடாதா?, பெண் என்பவள் எந்த விதத்திலும் ஆணின் துணை இன்றி தனியாக இருக்கக் கூடாதா? இது போன்ற ஆண் பெண் உறவிலான உணர்வு சார்ந்த பல கேள்விகளை இத்திரைப்படம் பார்வையாளர்கள் மத்தியில் எழுப்புகிறது. 

மேலும் படிக்க | ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய ரைசா வில்சனின் புகைப்படங்கள்! என்ன ஆச்சு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News