Star Movie Review Tamil Starring Kavin : ‘பியார் ப்ரேமா காதல்’ படத்தை இயக்கி அறிமுகமான இளன், ஸ்டார் படத்தை இயக்கி இருக்கிறார். இது, அவரது இரண்டாவது படம்தான் என்பது தெரியாத அளவிற்கு, ரசிகர்களுக்கு திரை விருந்தை அளித்திருக்கிறார். இப்படத்தின் ட்ரைலர் வெளியான போது, தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், ஸ்டார் படம் அதை பூர்த்தி செய்திருக்கிறதா? அதை இந்த விமர்சனத்தின் வாயிலாக பார்க்கலாம்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்....
ஸ்டார் ஆக வேண்டும் என்று கனவுகளுடன் வளரும் ஒருவன். தன் லட்சியத்தில் வெற்றி பெற முயன்று, இறுதியில் துவண்டு, மிரண்டு, தோய்ந்து போய் நிற்கிறான். அவனுக்கு இந்த யுனிவர்ஸ் கை கொடுத்ததா? கை விட்டதா? இதற்கான விடைதான் ஸ்டார் படத்தின் கதை.
கதையின் கரு:
சாதாரண நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த இளைஞன், கலை (கவின்). சிறுவயதில் இருந்தே சினிமா கனவுகளுடன் வளரும் இவருக்கு வீட்டில் அப்பா, அக்கா சப்போர்ட், அம்மாவை தவிர. +2வில் ஜஸ்ட் பாஸ் வாங்குபவரையும் பிடித்து இன்ஜினியரிங் படிப்பில் சேர்த்து விட, தன் சினிமா கனவை துரத்தி பிடிக்க அவ்வப்போது பட ஆடீஷன்களில் கலந்து கொள்கிறார். எத்தனை தோல்வி வந்தாலும் அனைத்தையும் எதிர்கொண்டு அடுத்ததை நோக்கி ஓடும் அவனுக்கு எதிர்பாராத விபத்து நேர்கிறது.
அந்த விபத்தினால் அவன் கனவை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகிறான். ஆனால் அவனே விட்டு விலகினாலும், அவனை மீண்டும் மீண்டும் சினிமா கனவுகள் துரத்திக்கொண்டே இருக்கிறது. தன் ஆசையையும் நிறைவேற்றிக்கொள்ள முடியாமல், குடும்ப கஷ்டத்தையும் தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கும் அவன், ஒரு கட்டத்தில் தனக்கு பிடித்தவர்களையும் தன்னையும் வெறுக்க ஆரம்பிக்கிறான். இடையில் அவனுக்கு கல்லூரி பருவத்தில் ஒரு காதல், கல்லூரியை முடித்த அவனை தேடி வரும் ஒரு காதல் என இரண்டு அழகான காதல் கதைகள். தன்னை மாற்றிக்கொண்டு சாதாரண வேலைக்கு செல்லும் அவன், தான் மகிழ்ச்சியாக இருப்பது போல நடித்து, வெறுத்து, தன்னுடன் இருப்பவர்களை புறந்தள்ளி அன்புக்குரியவர்களின் வெறுப்பிற்கும் ஆளாகிறான். அவனுக்கு தேவையான வாய்ப்பு கைக்கு எட்டிய தூரத்தில் இருக்கும் நேரத்தில், அவன் மனைவிக்கு சீரியஸ் என போன் வருகிறது. அவன் சினிமாவை தேர்ந்தெடுத்தானா? தன் மனைவியை தேர்ந்தெடுத்தானா? ஸ்டார் படத்திற்கு சென்று பாருங்கள்.
கலைஞனாக மாறிய கவின்..!
இதுவரை, நடிகர் கவினை ஒரு ஜாலியான இளைஞரின் கதாப்பாத்திரத்திலும், காதல் செய்யும் ரோட் சைட் ரோமியோ கதாப்பாத்திரத்திலும்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், அவருக்கு ஸ்டார் படத்தில் வேறு ஒரு வடிவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர். “அப்பா என் கிட்ட காசில்லப்பா...” என்று உடைந்து, அழுகுரலில் பேசும் இடத்திலும், படத்திற்காக தன் தந்தையிடம் வீர வசனம் பேசிக்காட்டும் இடத்திலும், தன் நிலையை கண்ணாடியில் பார்த்து‘ஓ’வென்று கதறும் இடத்திலும், தான் ஒரு திறமையான நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார் கவின். இனி இவருக்கு ‘ஸ்டார்’மாதிரியான படங்கள் அமைந்தால், கண்டிப்பாக பெரிய ஸ்டாராக வருவார் என்பதில் ஐயமில்லை.
நடிகர்களின் பங்கு:
கவினைத்தாண்டி, இந்த படத்தில் வரும் அனைத்து கதாப்பாத்திரங்களுக்கும் நிறைய வேலை கொடுத்திருக்கிறார் இயக்குநர் இளன். குறிப்பாக கவினின் தாய் கதாப்பாத்திரம் அபாரம். தந்தையும் மகனும் நெஞ்சுவலி நாடகம் போடும் இடங்களில் கலாட்டா செய்திருக்கிறார் லால். காதலிகளாக வரும் இருவரும் தங்களின் வேலையை சரியாக செய்திருக்கின்றனர். இருப்பினும் மீரா கதாப்பாத்திரம் நின்று பேசுகிறது. கவினின் நண்பனாக வரும் குலாபி கேரக்டருக்கு இன்னும் கொஞ்சம் கவனம் கொடுத்திருக்கலாம்.
அனைவரின் கதை:
ஸ்டார் படத்தின் கதை அனைவரையும் தியேட்டரில் அமர வைக்க காரணம், இது அனைவரின் கதை என்பதுதான். நம்மில் பலர் நமக்கு பிடித்த விஷயங்களை நோக்கி ஓடினாலும், ஒரு கட்டத்தில் அதை விடுத்து இயல்பு வாழ்க்கைக்கு வந்து விடுகிறோம். அதையும் இந்த படத்தில் மிக இயல்பாக காண்பித்திருக்கின்றனர். போராட்டம், வலி, தோல்வி ஆகியவை வாழ்வின் ஒரு பகுதியாக இருந்தாலும், அதுவே வாழ்வாக இருந்தாலும் நாம் அதை சிரிப்புடன் ஏற்றுக்கொள்ள பழகிக்கொண்டு கடந்து போக வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுக்கிறது ஸ்டார் படம்.
ஒட்டாத இடங்கள்:
ஸ்டார் படத்தின் கதை, 90ஸ் மற்றும் 2000ங்களில் நடப்பது போல காட்சிப்படுத்த பட்டுள்ளது. ஆனால், பல இடங்களில் தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு கதை இருப்பது போன்ற உணர்வைத்தான் படம் தருகிறது. யுவன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக மட்டுமே உள்ளது. ஆனால், யுவன் ரசிகர்களுக்கு படத்தில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது. அது என்ன என்று திரையரங்கிற்கு சென்று பாருங்கள். ஒரு சில இடங்களில் பிஜிஎம் ஸ்கோர் செய்கிறது.
படத்தின் க்ளைமேக்ஸை இன்னும் கொஞ்சம் சுருக்கமாக வைத்திருக்கலாம். கல்லூரிக்காலங்களில் வரும் பாடல்களும், இரண்டாம் காதல் வந்த பிறகு வரும் சில காட்சிகளும் படத்திற்கு வேகத்தடை. மொத்தத்தில் இது போன்ற சில குறைகளை நீக்கிவிட்டு பார்த்தால் கண்டிப்பாக சினிமா வானில் பாராட்டுமிக்க நட்சத்திரமாக ஒளிரும் ‘ஸ்டார்’.
மேலும் படிக்க | ஒரு நொடி படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ