தற்போது டர்பன் கிங்ஸ்மெட் மைதானத்தில் நடந்துவரும் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 351 ரன்களும், தென்னாப்பிரிக்கா அணி 162 ரன்களும் எடுத்தன. இதையடுத்து, குயின்டன் டிகாக் 81 ரன்களுடனும், மோர்னே மோர்கல் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
தென்னாப்பிரிக்க அணி வெற்றிக்கு 124 ரன்கள் தேவைப்படும் நிலையில், ஒரு விக்கெட்டை வீழ்த்தினால் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுவிடும் என்ற நிலை. இந்த போட்டியின் 4-ம் நாள் ஆட்டத்தின்போது தென்னாப்பிரிக்கா வீரர் டிவிலியர்ஸ் ரன் அவுட் செய்யப்பட்டார். அப்போது தென்னாப்பிரிக்கா வீரர் டிகாக்குடன், ஆஸ்திரேலிய அணியின் துணைக் கேப்டன் டேவிட் வார்னரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
4-ம் நாள் ஆட்டம் முடிந்து இரு அணி வீரர்களும் பெவிலியன் திரும்பும்போது, டிகாக்கை நோக்கி வார்னர் ஆவேசமாகத் திட்டினார். மைதானத்துக்கு வெளியில் நடந்த இந்த நிகழ்வின் சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
அதில், மைதானத்திலிருந்து இரு அணி வீரர்களும் டிரெஸ்ஸிங் ரூமிற்குச் செல்லும் வழியில் பின்னால் வரும் டிகாக்கை, வார்னர் திட்டுவது போன்றும், ஆஸ்திரேலிய அணியின் சக வீரர்கள் வார்னரை சமாதானப்படுத்துவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதோ அந்த சி.சி.டி.வி. வீடியோ காட்சி உங்கள் பார்வைக்கு..!