டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ரூதர்போர்ட் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் IPL போட்டிகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய 3-வது இந்தியர் என்னும் பெருமையை ஹர்பஜன் சிங் பெற்றுள்ளார்!
IPL 2019 தொடரின் இரண்டாவது குவாளிப்பையர் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைப்பெற்றது. இப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இறுதி கட்டத்தை எட்டியுள்ள IPL 2019 தொடரின் இறுதி போட்டி நாளை நடைபெறுகிறது. இப்போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
முன்னதாக நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ரூதர்போர்டை அவுட்டாக்கினார். இதன்மூலம் IPL போட்டிகளில் 150 விக்கெட்டுகள் எடுத்த 4 வது வீரர் மற்றும் 3-வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார்.
IPL போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் மும்பை அணியின் லசித் மலிங்கா 169 விக்கெட்டுகள் எடுத்து முதலிடத்திலும், டெல்லி அணியின் அமித் மிஸ்ரா 156 விக்கெட் எடுத்து இரண்டாவது இடத்திலும், 150 விக்கெட் எடுத்த கொல்கத்தா அணியின் பியூஷ் சாவ்லாவுடன் ஹர்பஜன் சிங்கும் இணைந்துள்ளார்.
இவர்களை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராவோ 147 விக்கெட்டுகளுடன் 5-வது இடத்தில் உள்ளார். நடப்பு தொடரின் இறுதி போட்டியில் பிராவோ 3 விக்கெட் வீழ்த்தும் பட்சத்தில் 150 விக்கெட் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இடம்பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.