இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ரத்தாகுமா?

Last Updated : Nov 8, 2016, 02:41 PM IST
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ரத்தாகுமா? title=

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் செய்வதற்காக சுப்ரீம் கோர்ட்டு சார்பில் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. 

இந்த லோதா கமிட்டி ‘இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பதவியில் இருக்கக்கூடாது, ஒரு மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு ஒரு ஓட்டுரிமை, இரண்டு முறை பதவி வகித்தால் அடுத்த முறை பதவிக்கு வருவதற்கு 3 ஆண்டு கால இடைவெளி இருக்க வேண்டும், ஐ.பி.எல். போட்டிக்கும் அடுத்து வரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கும் 15 நாட்கள் இடைவெளி தேவை’ இப்படி அடுக்கடுக்கான பரிந்துரைகளை செய்திருந்தது. அதற்கு ஒப்புதல் கொடுத்த சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரைகளை நிறைவேற்றும்படி கிரிக்கெட் வாரியத்தை அறிவுறுத்தியது.

ஆனால் ஒரு சிலவற்றை ஏற்றுக்கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம் முக்கியமான பரிந்துரைகளை அமல்படுத்த தொடர்ந்து மறுத்து வருகிறது. இதையடுத்து லோதா பரிந்துரைகளை அமல்படுத்தும் வரும் வரை மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு நிதி வழங்க கூடாது என்று உத்தரவிட்டு இருந்தது. 

இந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் நாளை துவங்குவதால், இந்த போட்டிக்கு நிதி வழங்க அனுமதிக்க வேண்டும் என்று பிசிசிஐ சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதி வழங்காவிட்டால் நடப்பு தொடர் ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தனது மனுவில் பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

அதேவேளையில், பிசிசிஐ -யின் மனுவுக்கு லோதா குழு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதிக்காமல் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கையில் பிசிசிஐ ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.  

Trending News