8 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு டெல்லியில் அரங்கேறிய 10-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொண்டது.
‘டாஸ்’ வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் கொல்கத்தாவை பேட் செய்ய பணித்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணி டெல்லியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது.
பின்னர் 186 என்ற இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா களமிறங்கினார். பரபரப்பான இந்த ஆட்டம் சமனில் (டை) முடிந்தது. 20 ஓவர்களில் டெல்லி அணி 6 விக்கெட்டுக்கு 185 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க ‘சூப்பர் ஓவர்’ முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய டெல்லி அணி ஒரு விக்கெட்டுக்கு 10 ரன் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணியால் சூப்பர் ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 7 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் டெல்லி அணி 3 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்தது.