MLC 2023: முதல் சாம்பியன் பட்டத்தை தூக்கிய MI... இறுதிப்போட்டியில் பூரனின் சரவெடி சதம்!

Nicholos Pooran MLC 2023: அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் சாம்பியன்ஷிப் பட்டத்தை எம்ஐ நியூயார்க் வென்ற நிலையில், இறுதிப்போட்டியில் கேப்டன் பூரன் 57 ரன்களில் 137 ரன்களை குவித்து மிரட்டியுள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Jul 31, 2023, 12:38 PM IST
  • 137 ரன்களில் 10 பவுண்டரிகள், 13 சிக்ஸர்கள் அடக்கம்.
  • பவர்பிளே ஓவர்களிலேயே 69 ரன்களை பூரன் குவித்தார்.
  • மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்துடைய அணிதான் எம்ஐ நியூயார்க் அணி.
MLC 2023: முதல் சாம்பியன் பட்டத்தை தூக்கிய MI... இறுதிப்போட்டியில் பூரனின் சரவெடி சதம்! title=

Nicholos Pooran MLC 2023: டி20 கிரிக்கெட் உலகளவில் பிரபலமாகி வரும் நிலையிலும், அதிக வருவாயை பெற்றுத் தருவதை அடுத்தும் டி20 தொடர்கள் பல நாடுகளில் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் தற்போது கொடிகட்டி பறக்கும் டி20 தொடராகும். அந்த அளவிற்கு அந்த தொடரில் வருவாய் குவிக்கப்படுகிறது. 

ஐபிஎல் தொடரை போலவே பல்வேறு டி20 தொடர்கள் நடைபெறும் நிலையில், அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் என்ற டி20 தொடரின் முதல் சீசன் கோலாகலமாக கடந்த ஜூலை 14ஆம் தேதி தொடங்கியது. சுனில் நரைன் தலைமையிலான லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ், பொல்லார்ட் தலைமையிலான எம்ஐ நியூயார்க், ஆரோன் பின்ச் தலைமையிலான சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ், பார்னல் தலைமையிலான சீயாட்டில் ஓர்கஸ், பாஃப் டூ பிளேசிஸ் தலைமையிலான டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், ஹென்ரிக்ஸ் தலைமையிலான வாஷிங்டன் ஃப்ரீடம் ஆகிய ஆறு அணிகள் மோதின. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதின. 

இதில் லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ அணிகள் வெளியேறி, மற்ற நான்கு அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது. தொடர்ந்து, எம்ஐ நியூயார்க்கிடம், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்து வெளியேறியது. வாஷிங்டன் அணியை வீழ்த்தி சீயாட்டில் அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன. இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு போட்டி தொடங்கியது. எம்ஐ அணிக்கு பிளேஆப் சுற்றில் பூரன் கேப்டனாக செயல்பட்ட நிலையில், இப்போட்டியிலும் கேப்டனாக தொடர்ந்தார். 

மேலும் படிக்க | 3வது ஒருநாள் போட்டியிலும் ரோஹித், கோலி இல்லையா? டிராவிட் சொன்ன பதில்!

இதில், எம்ஐ நியூயார்க் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த, சீயாட்டில் அணி 183 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக குவின்டன் டி காக் 87 ரன்களை குவித்தார். எம்ஐ நியூயார்க் பந்துவீச்சில் ரஷித் கான், போல்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து பேட்டிங் ஆடிய எம்ஐ நியூயார்க் அணிக்கு ஸ்டீவன் டெய்லர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இருப்பினும், அடுத்து வந்த கேப்டன் பூரன் பட்டாசாய் வெடிக்க ஆரம்பித்தார். அவர் பவர்பிளேவில் சியாட்டில் அணியை சிதைத்துவிட்டார் என எளிமையாக சொல்லலாம். 

பவர்பிளேவில் 22 பந்துகளை எதிர்கொண்ட அவர் 9 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என அடித்து மொத்தம் 69 ரன்களை குவித்துவிட்டார். ஜஹாங்கீர் 10 ரன்களில் ஆட்டமிழக்க, டிவால்ட் பிரேவிஸ் களத்திற்கு வந்து பூரனுக்கு பக்கபலமாக இருந்தார். பவர்பிளேவுக்கு பின்னரும் பூரன் அதே அதிரடியை தொடர்ந்தார் எனலாம். இமாத் வாசிம், கேம்ரூன் கனான், பிரிட்டோரியஸ், பார்னல், ஆண்ட்ரூ டை, ஹர்மித் சிங் என அனைவரின் பந்துவீச்சை தெறிக்கவிட்டார். 

தொடர்ந்து பிரேவிஸ் அவுட்டாக டிம் டேவிட் வந்து மறுமுனையில் பூரனுக்கு கைகொடுத்தார். பூரன் சதத்தை கடந்தும் சிக்ஸரை தெறிக்கவிட்டு வந்தார். இதனால், 16 ஓவர்களிலேயே 184 ரன்கள் என்ற இலக்கை எம்ஐ நியூயார்க் அணி எட்டி மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது. பூரன் 57 பந்துகளில் 137 ரன்களை குவித்த மலைக்க வைத்தார். அதில் 10 பவுண்டரிகளும், 13 சிக்ஸர்களும் அடக்கம். 

பூரன் மொத்தம் 388 ரன்களை இந்த தொடரில் எடுத்து, அதிக ரன்கள் எடுத்த பேட்டர் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். மேலும், இந்த தொடரில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரையும் பூரன் இந்த போட்டியில் பதிவு செய்தார். உலகெங்கிலும் உள்ள மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். டி20 கிரிக்கெட் வரலாற்றில், ஒரு தொடரின் இறுதிப்போட்டியில் இப்படி ஆக்ரோஷமாக யாருமே விளையாடியதில்லை என்று பூரனுக்கு வாழ்த்து சொல்லி நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். ஆட்ட நாயகன் விருதை பூரன் பெற்ற நிலையில், தொடர் நாயகன் விருதை கேம்ரூன் கனான் பெற்றார். தொடரில் மொத்தம் 11 விக்கெட்டுகளை கனான் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ’ரியல் ஜாம்பவான்’ ஸ்டூவர்ட் பிராட் ஓய்வுக்கு யுவராஜ் சிங்கின் ரியாக்ஷன்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News