ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்றுக்கொடுத்த சர்ஃபராஸ் அகமதுவின் கேப்டன் பதவி பறிப்பு

டி-20 மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டன் பதவியில் இருந்து சர்பராஸ் அகமதுவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீக்கியுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 18, 2019, 03:56 PM IST
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்றுக்கொடுத்த சர்ஃபராஸ் அகமதுவின் கேப்டன் பதவி பறிப்பு title=

லாகூர்: இலங்கைக்கு எதிரான பாகிஸ்தான் அணியின் மோசமான தோல்வியை அடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (Pakistan Cricket Board), அணியின் கேப்டன் சர்பராஸ் அகமதுவை (Sarfaraz Ahmed) பதவியில் இருந்து நீக்கியுள்ளது. சமீபத்தில் தங்கள் சொந்த மண்ணில் இலங்கைக்கு (Sri Lanka) எதிராக நடந்த டி-20 தொடரில் பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்தது. சர்வதேச டி-20 பட்டியலில் முதலிடத்தில் இருந்த பாகிஸ்தானின் தோல்வியை முன்னாள் கிரிக்கெட் வீரர் முதல் ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. மேலும் சர்பராஸ் அகமதுவின் கேப்டன் பதவியும் உலகக் கோப்பையின் போது விமர்சிக்கப்பட்டது. 

அதுமட்டுமில்லாமல் அணியின் பயிற்சியாளர் மிஸ்பாவும் கேப்டன் சர்ஃபராஸ் மீது அதிருப்தியில் இருந்தார். இந்த விவகாரத்தில் அவர் தனது அறிக்கையை பிசிபி தலைமை நிர்வாக அதிகாரி வாசிம் கான் முன் அளித்தார். இந்த சம்பவத்தை அடுத்து கேப்டன் பதவியில் இருந்து சர்பராஸ் அகமது நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது அணியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

டி-20 மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டன் பதவியில் இருந்து சர்பராஸ் அகமதுவை நீக்கியுள்ளது. சர்பராஸுக்கு பதிலாக டெஸ்ட் அணியின் கேப்டனாக அசார் அலி (Azhar Ali) தேர்வு செய்யப்பட்டுள்ளார். டி-20 அணியின் கேப்டன் பதிவை பாபர் ஆசாமிடம் (Babar Azam) ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் அணிக்கு ஐ.சி.சி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றுக்கொடுத்த பெருமை சர்ஃபராஸ் அகமதுவுக்கு உண்டு. சர்ஃபராஸின் தலைமையில் 2017 ஆம் ஆண்டு நடந்த இறுதிபோட்டியில் இந்தியாவை தோற்கடித்து பாகிஸ்தான் இந்த பட்டத்தை வென்றது. சர்ஃபராஸின் தலைமையில் பாகிஸ்தான் டி-20 தரவரிசையில் முதலிடத்தை எட்டியது. இருப்பினும், ஐ.சி.சி உலகக் கோப்பை மற்றும் பல சந்தர்ப்பங்களில் சர்பராஸ் கேப்டன் பதவி மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News