Coronavirus: கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவுக்கு எதிரான தொடர் ரத்து செய்யப்பட்டதையடுத்து தென்னாப்பிரிக்க வீரர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, நாடு திரும்பிய வீரர்கள் பாதுகாப்பு கருதி தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் (Cricket South Africa) ஒரு பெரிய நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் அனைத்து வீரர்களும் அடுத்த 14 நாட்களுக்கு தனிமையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதுக்குறித்து தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஷோயிப் மன்ஜ்ரா கூறுகையில், "வீரர்களிடம் தங்களை தனிமையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதனுடன், அனைத்து வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வாரியம் முடிவு செய்துள்ளது.
மேலும் ஷோயப் மன்ஜ்ரா கூறுகையில், "குறைந்தபட்சம் அடுத்த 14 நாட்களுக்கு வீரர்களை தனிமையில் வைக்குமாறு நாங்கள் கேட்டுக் கொண்டோம். அவர்களைச் சுற்றியுள்ள மக்கள், சமூகம் மற்றும் குடும்பங்களைப் பாதுகாப்பதற்கான வழி இதுதான் என்பதால், அவர்கள் தனிமைப் படுத்தப்படுகிறார்கள்.
அவர் கூறினார், "14 நாட்களுக்கான காலகட்டத்தில் ஏதேனும் அறிகுறிகள் காணப்பட்டால், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பயணத்தின் போது சில வீரர்கள் முகமூடிகளை அணிந்தனர். சிலர் அணியவில்லை எனக் கூறினார். தென்னாப்பிரிக்க அணி கொல்கத்தா வழியாக தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
தொடர் ரத்து செய்யப்பட்டது:
இந்தியாவில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு வந்தது. இந்தத் தொடர் மார்ச் 12 ஆம் தேதி தொடங்க விருந்தது. ஆனால் முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதன் பின்னர், மீதமுள்ள இரண்டு போட்டிகளும் கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டன. மார்ச் 13 அன்று தொடர் ரத்து செய்யப்பட்டது. ஆனால் தென் ஆப்பிரிக்க அணி நாடு திரும்புவதற்கு மூன்று நாட்கள் தாமதம் ஏற்பட்டது.