பள்ளிகளில் புழங்கும் போதை பொருட்களை தடுக்க நடவடிக்கை தேவை: PMK

தமிழ்நாட்டில் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கூல் லிப் போதைப் புகையிலை விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை!!

Last Updated : Nov 15, 2019, 02:44 PM IST
பள்ளிகளில் புழங்கும் போதை பொருட்களை தடுக்க நடவடிக்கை தேவை: PMK title=

தமிழ்நாட்டில் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கூல் லிப் போதைப் புகையிலை விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை!!

மாணவர்களின் முன்னேற்றத்திற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், மற்றொருபுறம் ஒரு கும்பல் பள்ளி மாணவர்களை போதைப் புகையிலை பயன்பாட்டுக்கு  அடிமையாக்கி வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்  என்று பலமுறை வலியுறுத்தியும் பள்ளிகளில் புகையிலை புழக்கம் நீடிப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

கூல் லிப் (Cool Lip) என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் வடிகட்டியுடன் கூடிய போதைப் புகையிலை தான் மாணவர்களை சீரழிக்கும் தீயசக்தியாக உருவெடுத்திருக்கிறது. கூல் லிப் புகையிலை தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது. தில்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்படும்  கூல் லிப் புகையிலை கர்நாடகத்திலிருந்து கடத்தி வரப்பட்டு தமிழகத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறது. தொடக்கத்தில் சில கடைகளில் மட்டும் விற்பனை செய்யப்பட்ட இந்த போதைப்  புகையிலைப் பொருள், இப்போது பள்ளிகளை முக்கிய சந்தையாக மாற்றிக் கொண்டிருக்கிறது. மேலும் மாணவர்களையே விற்பனை முகவர்களாக மாற்றியிருக்கின்றனர் இப்பொருளை புழக்கத்தில் விட்டவர்கள்.

வழக்கமான போதைப் பொருட்களுக்கு கல்லூரி மாணவர்கள் எவ்வாறு அடிமையாக்கப்படுவார்களோ, அதேபோல் தான் பள்ளி மாணவர்களும் கூல் லிப் போதைப் புகையிலைக்கு அடிமைப்படுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு முதலில் சில நாட்களுக்கு கூல் லிப் போதைப் புகையிலை இலவசமாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் போதைப் புகையிலைக்கு அடிமையான பின்னர் அவர்கள் ஒரு பாக்கெட்டுக்கு ரூ.20 கட்டணம் செலுத்த வேண்டும்; இல்லாவிட்டால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை பிடித்து தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றனர். வசதி படைத்த மாணவர்கள் பணத்தைக் கொடுத்து கூல் லிப் போதைப் புகையிலையை வாங்கி பயன்படுத்தும் நிலையில், பணம் கிடைக்காத மாணவர்கள் தங்களின் நண்பர்களை மூளைச்சலவை செய்து இந்த பழக்கத்துக்கு அடிமையாக்கி, அதற்கு ஈடாக தங்கள் பயன்பாட்டுக்கு கூல் லிப் புகையிலையை இலவசமாக பெற்றுக் கொள்கின்றனர். இப்படியாக இந்த போதைக்கு ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் அடிமையாகின்றனர்.

கூல் லிப் என்பது சற்று மாறுபட்ட வடிவத்தில் கிடைக்கும் மெல்லும் புகையிலை ஆகும். வடிகட்டி பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கூல் லிப் புகையிலையை வாயில் போட்டு, ஒரு ஓரத்தில் அடக்கி வைத்துக் கொண்டால், அப்புகையிலை பட்டதும் சுரக்கும் உமிழ்நீர் ஒருவகையான போதையை ஏற்படுத்துகிறது. அதற்கு அடிமையாகும் மாணவர்களும், இளைஞர்களும் அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கின்றனர். சென்னையில் பல பள்ளிகளில் பாடவேளைகளிலேயே மாணவர்கள் இந்த புகையிலையை பயன்படுத்தி மயங்கிய நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல நேரங்களில் இந்த புகையிலை வாய் நாற்றத்தைப் போக்கும் வாசனைப் பொருள் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படுவதால், இதற்கு மாணவர்கள் மிகவும் எளிதாக அடிமையாகின்றனர். இது மிக மிக ஆபத்தான போக்கு ஆகும்.

புகைக்கும் புகையிலை, மெல்லும் புகையிலை ஆகியவற்றை விட கூல் லிப் புகையிலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதை தொடர்ந்து பயன்படுத்துவதால் தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நோய்கள் தாக்கும் ஆபத்து இருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர். வழக்கமான புகையிலைப் பொருட்கள் இளைஞர்களை குறி வைக்கும் நிலையில், கூல் லிப் மாணவர்களை குறி வைப்பது தான் மிகவும் கவலை அளிக்கிறது. பள்ளிகளில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்று  விதிகள்  உள்ள நிலையில், கூல் லிப் போதைப் புகையிலை வகுப்பறை வரை வந்து பரபரப்பாக விற்பனையாகிறது.

மாணவர்களின் எதிர்காலம் அவர்களின் பதின் வயது பழக்க வழக்கங்களை பொறுத்தே அமையும்.  சரியாக பதின் வயது தொடங்கும் பருவத்தில் மாணவர்கள் கூல் லிப் புகையிலைக்கு அடிமையானால் அடுத்தடுத்தக் கட்டங்களில் இன்னும் மோசமான போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி எதிர்காலத்தை இழந்து விடக்கூடும். இந்த ஆபத்திலிருந்து மாணவர்களைக் காக்கும் கடமை தமிழக அரசுக்கு உண்டு. எனவே, தமிழ்நாட்டில் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கூல் லிப் போதைப் புகையிலை விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

 

Trending News