சாகுபடிக்காக சேர்வலாறு, மணிமுத்தாறு நீர்த்தேக்கம் திறப்பு!

Last Updated : Oct 2, 2017, 06:36 PM IST
சாகுபடிக்காக சேர்வலாறு, மணிமுத்தாறு நீர்த்தேக்கம் திறப்பு! title=

திருநெல்வேலி மாவட்ட மக்களின் வேண்டுகோளுக்காக வரும் அக்டோபர் 5 ஆம் தேதி  பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

இதுகுறித்து அரசு செய்திகுறிப்பில் வெளியிடப்பட்டுள்ளதாவது:

"திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி பாசன அமைப்பின் நேரடி மற்றும் மறைமுகப் பாசனப் பரப்புகளுக்கு, பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட வேளாண் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று 5.10.2017 முதல் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி பாசன அமைப்பிலுள்ள வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங் கால்வாய், திருநெல்வேலி கால்வாய் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் மேலக்கால் கால்வாய், மருதூர் கீழக்கால் கால்வாய், தெற்கு பிரதானக் கால்வாய் மற்றும் வடக்கு பிரதானக் கால்வாய் ஆகிய கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படும். இதனால், 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெறவேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்."

என குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News