அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் வெறும் நாடகம்: இரா.முத்தரசன் தாக்கு

தன்னையும், தன் அமைச்சரவையையும் காப்பாற்றிக் கொள்ள மோடியிடம் அடிமையாய் கிடக்கிறது எடப்பாடி பழனிசாமியின் அதிமுக அரசு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 25, 2019, 01:27 PM IST
அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் வெறும் நாடகம்: இரா.முத்தரசன் தாக்கு title=

தமிழ்நாட்டில் மக்களவை மற்றும் இடைத்தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில், ஏற்கனவே அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்தநிலையில், நேற்று கூடுதலாக அதிமுகவின் சாதனைகள் மற்றும் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கை இணைப்பை அதிமுக வெளியிட்டது. அதில் இலங்கை தமிழர் படுகொலைக்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுதரப்படும், 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியுறுத்துவோம் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் மற்றும் அதிமுக அரசின் சாதனைகள் அடங்கியயுள்ளது.

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் வெறும் நாடகம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் விமர்சனம் செய்துள்ளார்.

அதுக்குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:- 

அதிமுக தனது தேர்தல் வாக்குறுதியில் பல பொய் வரலாறுகளையும், பொய் வாக்குறுதிகளையும் வாரி இரைத்துள்ளது. குறிப்பாக ஏழு தமிழர்கள்' விடுதலைக்காக மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியுறுத்துவதாக கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றமே வழிகாட்டிபடி, தமிழக அமைச்சரவை ஏழு பேரையும், விடுவிக்க ஒப்புதல் அளித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிய பிறகும், இவ்விஷயத்தில் மத்திய அரசு கனத்த மவுனமாக இருப்பதையும், தமிழக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதையும் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

அதேபோன்று, 'நீட்' தேர்வு வேண்டாம் என அனைத்துக் கட்சி ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தமிழக சட்டப்பேரவை தீர்மானமும் கிடப்பில் உள்ளது. இதற்கும் தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதையும் மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

தன்னையும், தன் அமைச்சரவையையும் காப்பாற்றிக் கொள்ள மோடியிடம் அடிமையாய் கிடக்கும் எடப்பாடி பழனிசாமியின் அதிமுக அரசு தற்போது தேர்தல் நேரத்தில் வெற்று நாடகம் ஆடுவதை தமிழக வாக்காளர்கள் அறிந்தே வைத்துள்ளனர். 

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Trending News