தஞ்சை தேர் விபத்து...சட்டபேரவையில் அதிமுகவினர் தர்ணா

திருவிழாக் காலங்களில் போதிய பாதுகாப்பு இல்லை என தஞ்சாவூர் தேர் விபத்து விவகாரத்தில் கண்டனம் தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். 

Written by - Chithira Rekha | Last Updated : Apr 27, 2022, 01:44 PM IST
  • தஞ்சை தேர் விபத்துக்கு கண்டனம்
  • சட்டப்பேரவையில் அதிமுக தர்ணா
  • அவைக்காவலர்கள் மூலம் வெளியேற்றம்
தஞ்சை தேர் விபத்து...சட்டபேரவையில் அதிமுகவினர் தர்ணா title=

தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற தேர் திருவிழாவில் எதிர்பாராத விதமாக தேர் மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சட்டப்பேரவையில் இந்த விபத்து குறித்த இரங்கல்  தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.  
 
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் மின்சார விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்கப்படும் எனவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனடியாக தஞ்சைக்கு விரைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் படுகாயமடைந்தவருக்கு  சிறப்பான சிகிச்சை அளிக்கவும், விபத்து பகுதியில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய ஸ்டாலின், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தையும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் தான் நேரில் சென்று சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும் படிக்க | Thanjavur Temple Chariot: உயிரிழந்தவருக்கு பேரவையில் இரங்கல்; 2 நிமிட மௌன அஞ்சலி

பின்னர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினா். இதனைத் தொடர்ந்து, இவ்விபத்து தொடர்பாக அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானம் மீது பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, தேர் திருவிழா என்றால் மின்சாரம் நிறுத்தப்பட வேண்டும் எனவும், சாலைகள் முழுமையாக செப்பனிடப்பட்டிருக்க வேண்டும் எனவும், ஆனால் தஞ்சையில் இது போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் கண்டனம் தெரிவித்தார். 

EPS Speaking in Assembly

பின்னர் கோவில் திருவிழாக்களில் போதுமான பாதுகாப்பை ஏற்படுத்தாத தமிழக அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாக அதிமுகவினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திருவிழா நேரத்தில் அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம், காவல்துறை இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே உயிரிழப்புக்குக் காரணம் எனத் தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கும்பகோணம் மகாமகத்தில் நீராட சென்று போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்ததாகவும், கும்பகோணம் பள்ளி தீ விபத்து, மவுலிவாக்கம் கட்டட விபத்து போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாகவும் கூறினார். ஆன்மீகத்தை அரசியலாக்கக்கூடாது எனவும், இனி வரும் காலங்களில் இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் செல்வப்பெருந்தகை பேசினார்.

1992-ம் ஆண்டு கும்பகோணம் மகாமகத்தின் போது ஏற்பட்ட விபத்து குறித்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் பேசிய விவரங்கள் குறித்து காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை பேசியவற்றை அவைக் குறிப்பிலிருந்து நீக்கக் கோரி அதிமுக உறுப்பினர்கள் தொடர்ச்சியாகக் கூச்சலிட்டு முழக்கம் எழுப்பினர். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவையில் பேச முற்பட்ட போது, ’வெளிநடப்பு செய்துவிட்டு பேச அனுமதி கேட்டால் கொடுக்க முடியாது’ என பேரவைத் தலைவர் அனுமதி மறுத்தார்.

இதனால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவை உள்ளேயே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களை அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்ற பேரவைத்தலைவர் உத்தரவிட்டார். இதுகுறித்து விளக்கமளித்த சபாநாயகர் அப்பாவு, மகாமகம் விபத்து குறித்து ஜெயலலிதா என்ன பேசினாரோ, அவைக் குறிப்பில் உள்ளதைத்தான் செல்வபெருந்தகை பேசியுள்ளதாகவும், வெளிநடப்பு செய்த பின்பு மீண்டும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து பேசமுடியாது என்பதாலேயே அதிமுகவினருக்கு அனுமதி கொடுக்கவில்லை எனவும் கூறினார். 

Speaker Appavu

விதிகளின்படி நாள் ஒன்றிற்கு 2 கவன ஈர்ப்பு தீர்மானம் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும் எனவும், எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காகவே நாளொன்றுக்கு நான்குக்கும் மேற்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும், கனத்த இதயத்துடன் தான் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை வெளிநடப்பு செய்ய வலியுறுத்தியதாகவும், வரும் காலங்களில் மரபு மீறிய செயல்கள் அவையில் நடைபெறக் கூடாது எனவும் சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்தார். 

மேலும் படிக்க | தஞ்சாவூர் துயர சம்பவத்தால் பேரதிர்ச்சியும் பெருந்துயருமடைந்தேன்: சீமான்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News