வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் அதிமுகவின் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் தென் மாவட்டங்களில் இன்று தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெறுகிறது. தென் மாவட்டங்களில் முக்கிய நகரங்களில் இந்த கூட்டமானது நடைபெற இருக்கிறது. அதன்படி ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, புதுக்கோட்டை, திருச்சி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் நடைபெற இருக்கிறது. இதன் முதல் நாள் முதல் கூட்டம் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி, தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய நிர்வாகிகள் அனைவருமே 2024 தேர்தலை முன்வைத்து நடக்கக்கூடிய இந்த மாநாட்டிற்கு பெரும் திரளான தொண்டர்கள் வரவேண்டும் என்ற மையக்கருத்தை வலியுறுத்தி பேசினர். இறுதியாக பேசிய அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி "இந்திய அரசியல் வரலாற்றில் கடந்த நாடாளுமன்ற தேர்தல்கள் போல் இல்லாமல் இந்தத் தேர்தல் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக பார்க்கப்படுகிறது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் மையப் பகுதியாக யார் அடுத்த பிரதமர் என்பதை முடிவு செய்யும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
எதிர் கூட்டணியில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது. அதேபோலத்தான் அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியிலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. ராமநாதபுரம் பாராளுமன்ற முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பல்வேறு தலைவர்கள் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியை குறி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பொறுப்பேற்று இருக்கின்ற அதிமுகவின் தயவை பெறுகின்ற கூட்டணி, இந்த ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியை வெல்லும்" என பேசினார். ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடலாம் என கூறப்படும் நிலையில் கேபி முனுசாமி கூறியுள்ள இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | மின்கம்பம் விழுந்து விபத்து... துண்டான விளையாட்டு வீரரின் கால் - கதறும் தாய்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ