ADMK உடன் கூட்டணி அமைத்தது குறித்து அன்புமணி ராமதாஸ் விளக்கம்!!

தமிழகத்தில் இனி தனியாக போட்டியிட்டு யாருமே வெல்ல முடியாததால் தான் கூட்டணி என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்!!

Last Updated : Feb 25, 2019, 01:47 PM IST
ADMK உடன் கூட்டணி அமைத்தது குறித்து அன்புமணி ராமதாஸ் விளக்கம்!! title=

தமிழகத்தில் இனி தனியாக போட்டியிட்டு யாருமே வெல்ல முடியாததால் தான் கூட்டணி என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்!!

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னை நட்சத்திர ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக கூட்டணியில் இணைந்தது குறித்து விளக்கினார். அப்போது, 2016 ஆம் ஆண்டின் சூழலுக்கு ஏற்ப திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்ததாகவும் தற்போதைய சூழலுக்கு அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும் அன்புமணி கூறினார்.

தனித்து களம் இறங்கிய தங்களுக்கு 6 விழுக்காடு வாக்கு கிடைத்தது என்றும், ஆனால் தமிழக மக்கள் தங்களை அங்கீகரிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். கடுமையாக விமர்சித்து வந்த அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததில் எந்த நெருடலும் இல்லையா என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு எந்த நெருடலும் இல்லை என்று அன்புமணி பதில் அளித்தார்.

ஆளுநரை சந்தித்து அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கூறிய நிலையில் தற்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏன் கூட்டணிக்கான நிபந்தனையை முன்வைக்கவில்லை என்ற கேள்வியை தொடர்ந்து செய்தியாளர்கள் அன்புமணி இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றது.

அப்போது, தமிழகத்தில் தனியாக வெல்லும் அளவிற்கு யாருக்கும் பலம் கிடையாது. அதனால்தான் நாங்கள் கூட்டணி வைக்க முடிவு செய்தோம். அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி சேர மாட்டோம் என சொன்னது உண்மை, மறுக்கவில்லை. 

ஆனால் 2011 ஆம் ஆண்டு சொன்னபோது இருந்த சூழல், தற்போது இல்லை; இப்போது இரு பெரும் தலைவர்களும் இல்லை. மேலும், 10 அம்ச கோரிக்கைகளை முதல்வரிடம் வழங்கி உள்ளோம், நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளோம். விவசாய கடன் ரத்து, காவிரி படுகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட திட்டங்கள் வரக்கூடாது என்ற கோரிக்கையை பார்த்துக்கொள்வதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கும் அரசு நடவடிக்கை எடுக்கும்; நாங்கள் அழுத்தம் கொடுப்போம்" என அவர் கூறினார்.

ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்ட தற்போதும் எதிர்க்கிறீர்களா? எனும் கேள்விக்கு அன்புமணி பதில் அளிக்கவில்லை. இதே போல் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பும் போது அவர்கள் ஆவேசமாக இருப்பதாகவும், தன்னை அடித்துவிடக்கூடும் என்றும் மைக்கை ஆஃப் செய்யுங்கள் என்றும், செய்தியாளர்களுக்கு தண்ணீர் கொடுங்கள் என்றும் தனது உதவியாளர்களுக்கு அன்புமணி உத்தரவிட்டுக் கொண்டே இருந்தார்.

ஒரு கட்டத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டு அன்புமணி எழுந்து சென்றார்.

 

Trending News