அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அடுத்தடுத்து வழக்குப்பதிவு செய்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது ஸ்மார்ட் சிட்டி டெண்டர் விதிமீறல் புகாரில் வழக்குப்பதிவு செய்த தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை திட்ட அனுமதிக்காக 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக இன்னொரு அதிமுக முன்னாள் அமைச்சரான வைத்திலிங்கம் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது. அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் டிவிஏசி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறது.
வைத்திலிங்கம் மீது லஞ்ச புகார்
அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரில், 2015-16 ஆம் ஆண்டு முன்னாள் வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் திட்ட அனுமதிக்காக (plan approval) ரூ. 28 கோடி லஞ்சம் வாங்கிய தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட அந்த புகாரில், ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டிஸிடமிருந்து பெருங்களத்தூரில் உள்ள அவர்களது கட்டிட திட்ட அனுமதிக்காக, ஸ்ரீராம் குழுவின் மற்றொரு நிறுவனமான பாரத் கோல் அண்ட் கெமிக்கல் மூலம் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மகன் பிரபு வைத்திலிங்கத்தின் முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனத்திற்கு 28 கோடி ரூபாய் பிணையில்லா கடன் என்ற பெயரில் லஞ்சமாக வழங்கியதற்கான ஆதாரங்கள் இணைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதை பயன்படுத்தி முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திருச்சியில் மகன் பல்வேறு சொத்துக்கள் வாங்கியதற்கான ஆதாரங்களும் அறப்போர் இயக்கம் இணைத்திருந்தது. இந்த புகாரின் மீது தற்பொழுது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தவெக மாநாடு! மவுனமாய் காய் நகர்த்தும் விஜய்.. எந்தெந்த கட்சிகளுக்கு சவால்
எஸ்பி வேலுமணி மீதான வழக்கு விவரம்
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது கடந்த 2018, 2019 ஆம் ஆண்டு காலத்தில் சென்னை மாநகராட்சியில் விடப்பட்ட டெண்டரில் விதிமீறல்கள் நடத்தப்பட்டு இருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அவருடன் சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் உள்பட 11 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த புகாரில், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 2018, 2019 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க டெண்டர் விடப்பட்டது. சாலைகளை சீரமைக்க ரூ.300 கோடியும்,ம ழைநீர் வடிகால் பணிகளுக்காக ரூ.290 கோடி மதிப்பிலும் டெண்டர்கள் விடப்பட்டன.
அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ். பி. வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி அரசு பொறியாளர்கள் டெண்டர் விடுவதில் முறைகேடுகள் நடத்தியும், டெண்டர் விடப்படும் ஒப்பந்ததாரர்கள் நியமிப்பதிலும் முறைகேடாக செயல்பட்டு ரூ.26.61 கோடி முறைகேடு செய்து அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக அறப்போர் இயக்கம் அந்த புகாரில் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை, டெண்டரில் விதிமீறல் இருப்பதாக கூறி மாநகராட்சி செயற்பொறியாளர் முருகன், கண்காணிப்பு பொறியாளர் சின்னசாமி, செயற்பொறியாளர் சரவணமூர்த்தி, பெரியசாமி, சின்னதுரை, நார்ச்சன், முன்னாள் செயற்பொறியாளர் சுகுமாரன், கண்காணிப்பு பொறியாளர் விஜயகுமார், தலைமை பொறியாளர் நந்தகுமார், முதன்மை பொறியாளர் புகழேந்தி என 10 அரசு அதிகாரிகளுடன் எஸ்பி வேலுமணி மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கிசுகிசு : நடிகரை கவனிக்கும் சூரிய கட்சி, உட்சகட்ட குழப்பத்தில் குடில் இயக்குநர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ