ஒரே மேடையில் சந்திக்க போகும் விஜய் - திருமாவளவன்! அதுவும் இந்த விழாவில்?

அடுத்த மாதம் டிசம்பர் 6ம் தேதி சென்னையில் நடைபெறும் அம்பேத்கர் பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளனர்.

Written by - RK Spark | Last Updated : Nov 2, 2024, 11:54 AM IST
    விஜய், திருமாவளவன் பங்கேற்கும் புத்தக விழா.
    அடுத்த மாதம் சென்னையில் நடைபெற உள்ளது.
    தமிழக அரசியலை திசை திருப்பும் நாள்..?
ஒரே மேடையில் சந்திக்க போகும் விஜய் - திருமாவளவன்! அதுவும் இந்த விழாவில்? title=
தமிழகத்தில் திமுகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கடந்த சில தேர்தல்களில் கூட்டணி வைத்து வருகின்றன. சுமுகமாக சென்று கொண்டிருந்த இந்த உறவில் சமீப நாட்களாக சில விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசிய சில கருத்துக்கள் இந்த கூட்டணியில் முதற்கட்ட விரிசலை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார். இதனால் திமுக கூட்டணியில் சில சலசலப்பு ஏற்பட்டது. ஆதவ் அர்ஜுனன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று திமுகவினர் எதிர்பார்த்தனர், ஆனால் ஆதவ் அர்ஜுனா பேச்சால் யாருக்கும் அதிருப்தி இல்லை என்றும், திமுக கூட்டணி உறுதியாக இருக்கிறது என்றும் திருமாவளவன் தெரிவித்து இருந்தார். 

இதைத் தொடர்ந்து கடந்த வாரம் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி நடைபெற்றது. இதில் விஜய் பல முக்கிய கருத்துகளை பேசி இருந்தார். கவர்னர் பதவி எடுக்கப்பட வேண்டும், இரு மொழிக் கொள்கை தொடரும், திராவிடமும் தேசியமும் இரு கண்கள், ஊழலை ஒழிப்போம் போன்ற பல கருத்துக்களை முன்னிறுத்தினார். அதில் அதிகம் கவனம் பெற்றது தனி பெரும்பான்மையாக ஆட்சி அமைத்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பதவி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த பேச்சு தமிழக அரசியலில் மீண்டும் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக திமுகவிலிருந்து சில தலைவர்கள் இதனை எதிர்த்து பேசியிருந்தனர். 

விஜய்க்கு திருமா எதிர்ப்பு

மேலும் திருமாவளவன் விஜய்யின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மிக நீண்ட அறிக்கையொன்றையும் வெளியிட்டு இருந்தார். " கூட்டணியில் இணைய வருவோருக்கு ஆட்சியதிகாரத்தில் பங்கு" என்கிற ஒரு புதிய நிலைபாட்டை தமிழக அரசியல் களத்தில் முதன் முதலாக முன்மொழிந்துள்ளார். இது அரசியல் களத்தில் அவர் வீசும் அணுகுண்டு என்றும் பெருமிதம் பொங்கக் கூறியுள்ளார். ஆனால், இது யுத்த களத்தில், உரிய நேரத்தில், உரிய இலக்கில் வீசியதாகத் தெரியவில்லை. அது அவர் எதிர்பார்க்கும் விளைவை ஏற்படுத்துமா எனத் தெரியவில்லை" என்று கூறி இருந்தார். இதற்கு தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் பதிலடி கொடுத்து வந்தனர். கூடுதலாக காங்கிரஸ் தரப்பிலிருந்து அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று திமுக தலைமைக்கு கடிதம் ஒன்றும் எழுதப்பட்டது. 

விஜய் - திருமா சந்திப்பு?

திமுக - விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என்று சமீபத்தில் திருமாவளவன் மீண்டும் தெரிவித்து இருந்தார்.  இந்த நிலையில் அடுத்த மாதம் டிசம்பர் 6ஆம் தேதி சென்னையில் நடைபெறும் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் மற்றும் திருமாவளவன் கலந்து கொள்ள உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. அம்பேத்கர் பற்றி திருமாவளவன் எழுதியுள்ள புத்தகத்தை விஜய்க்கு அவர் இந்த விழாவில் கொடுக்க உள்ளார். இது குறித்து இரு தரப்பிலும் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை இந்த சந்திப்பு நடைபெற்றால் தமிழக அரசியலில் சில முக்கிய மாற்றங்கள் நிகழும் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஆதவ் அர்ஜுனாவை வைத்து திருமாவளவன் சில கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்று சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், திருமாவளவனின் இந்த அடுத்த கட்ட நகர்வு அனைவருக்கும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 2026 தேர்தலை மையமாக வைத்து திமுகவிற்கு எதிராக விஜய்யை திருப்பிவிடும் வேலையை திருமாவளவன் செய்கிறார் என்று திமுக தரப்பில் தற்போது பேசப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க | Chennai Rains LIVE Updates: சென்னைக்கு மீண்டும் ரெட் அலெர்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News