விதிகளை பின்பற்றி உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறதா? என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது!
முன்னதாக., உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களில் முடிவுகளை வெளியிட தாமதம் ஏற்படுவதாக கூறி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சத்தியநாராயணன் முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது.
மனு மீதான விசாரணையின் போது திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், வாக்கு எண்ணும் மையங்களில் இருந்த திமுகவினர் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டதாகவும், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகும் தேர்தல் முடிவுகளை வெளியிட தேர்தல் அதிகாராகள் காலத்தாமதம் செய்ததாகவும் வாதிட்டார்.
மேலும், இரவிலும் வாக்கு எண்ணிக்கை தொடர்வதால், கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து ஆஜரான மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞர் சுந்தரேசன், மின்னணு இயந்திரங்கள் இல்லாமல் வாக்குச் சீட்டு முறையில் எண்ணப்படுவதால் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதாக வலியுறுத்தினார்.
மேலும் வாக்கு எண்ணிக்கையானது, இன்று மாலை 6 மணிக்குள் நிறைவடையும் எனவும், வாக்கு எண்ணிக்கை நிறைவடையாத நிலையில் திமுக தொடர்ந்த வழக்கு தேவையற்றது எனவும் குறிப்பிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வாக்கு எண்ணிக்கை குறித்து மாநில தேர்தல் ஆணையம் இன்று மாலை 4 மணிக்குள் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் விதிகளை பின்பற்றி உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறதா? என விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தது.
தமிழகத்தில் 9 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தல் ஆனது இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களை தவிர்த்து மீதம் உள்ள மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நேற்று (ஜனவரி 2-ஆம் தேதி) துவங்கி நடைப்பெற்று வருகிறது. வாக்குப்பதிவு ஆனது மின்னனு வாக்கு இயந்திரங்கள் இன்றி நடைப்பெற்றதால் தற்போது இரண்டாவது நாளாக வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.