ஒருதலைப்பட்சமாக தி.மு.க. அறிக்கை வெளியிட்டது வருத்தமளிக்கிறது. - ஈபிஎஸ்!

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையானது ஒருதலை பட்சமாக உள்ளது என தமிழக முதலவர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Last Updated : Jan 7, 2018, 04:43 PM IST
ஒருதலைப்பட்சமாக தி.மு.க. அறிக்கை வெளியிட்டது வருத்தமளிக்கிறது. - ஈபிஎஸ்! title=

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையானது ஒருதலை பட்சமாக உள்ளது என தமிழக முதலவர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...

"திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், நேற்று (6.1.2018) என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை உடனே பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். 

அப்போது, அவரிடம் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு இதுவரை எடுத்துள்ள பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தெரிவித்து, போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் ஊதியம் குறித்த கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக் கொண்ட நிலையில் சில தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் தொடர்வது தவறானது என்றும் தெரிவித்தேன். ஊதியம் குறித்த பேச்சு வார்த்தை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தலைமையில் 23 முறை இதுவரை நடைபெற்றுள்ளது. தொழிலாளர்கள் 2.57 காரணி ஊதிய உயர்வு கோரி கோரிக்கை வைத்தனர். 2013 ல் போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கிய ஊதிய உயர்வான 5.5 சதவீதத்தை, 2.44 காரணியுடன் சேர்த்து பார்த்தால் தொழிலாளர்கள் கேட்டுள்ள 2.57 காரணி ஊதிய உயர்வுக்கு நிகராக அமைந்துள்ளது என்ற விபரமும் தெரிவிக்கப்பட்டது.

ஊதிய உயர்வின்படி போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ள அதிகபட்ச ஊதிய உயர்வு ரூ.11,361/-, குறைந்தபட்ச ஊதிய உயர்வு ரூ.2,684/-. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள ஊதிய உயர்வைவிட, தற்போது வழங்கப்படவுள்ள ஊதிய உயர்வு அதிகமானதாகும் என்ற விபரமும் தெரிவித்து, எதிர்கட்சித் தலைவரின் தொழிற்சங்கங்களை சார்ந்தவரிடம் நான் எடுத்துரைத்த விவரங்களை தெரிவித்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவண்ணம், உடனே வேலைநிறுத்தத்தை கைவிட்டு, பணிக்கு திரும்புமாறு அறிவுறுத்துங்கள் என்று கூறினேன். 

ஆனால், தி.மு.க. தனது அறிக்கையில், முதலமைச்சரிடம் தொலைபேசியில் எதிர்கட்சித் தலைவர் தொழிலாளர் பிரச்சினையையும் பொதுமக்களின் நெருக்கடியையும் தீர்க்க கேட்டுக்கொண்டதாகவும், தமிழ்நாடு அரசு, என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது தொடர்பான விவரம் எதையும் தெரிவிக்கவில்லை என இன்று (7.1.2018) காலையில் வெளி வந்த செய்தித்தாள்களின் வாயிலாக அறிந்தேன். 

நான் எதிர்க்கட்சித் தலைவரிடம் போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நான் கூறியதை தெரிவிக்காமல், ஒருதலைப்பட்சமாக தி.மு.க. அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. இத்தருணத்தில் பொதுமக்களின் நலன் கருதி, போக்குவரத்துத் தொழிலாளர்கள் உடனே பணிக்குத் திரும்ப மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்!

Trending News