திமுக கூட்டணி இறுதியானது... காங்கிரஸ் கட்சிக்கு 10 இடம் - அடுத்தது என்ன?

DMK - Congress: வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Mar 9, 2024, 08:16 PM IST
  • திமுக இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் 21 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட உள்ளது.
  • புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கீடு நிறைவடைந்துள்ளது.
திமுக கூட்டணி இறுதியானது... காங்கிரஸ் கட்சிக்கு 10 இடம் - அடுத்தது என்ன? title=

DMK - Congress, INDIA Alliance: மக்களவை தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளுக்கு முடுக்கிவிட்டுள்ளன. தேசிய அளவிலும், ஒவ்வொரு மாநில அளவிலும் கட்சிகள் தங்களின் கூட்டணி பேச்சுவார்த்தைகள், கூட்டணிக்குள்ளான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள், வேட்பாளர்களுக்கான நேர்காணல்கள், வேட்பாளர்கள் பட்டியல் தயாரிப்பு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, பரப்புரைகள் என தேர்தல் பணி அனல் பறந்து வருகிறது. 

பாஜக vs காங்கிரஸ்

தேசியளவில் ஆளும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியும், எதிர்கட்சிகளின் கூட்டணியான INDIAவும் முதற்கட்டமாக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. பாஜக முதற்கட்டமாக 195 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்க, காங்கிரஸ் கட்சியோ 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. காங்கிரஸ் அறிவித்த 39இல் 27 தொகுதிகள் தென்னிந்தியாவில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலமே, தென்னிந்தியாவில் காங்கிரஸ் எந்தளவிற்கு பலமாக இருக்கிறது என்பதை உணரலாம். குறிப்பாக, அக்கட்சி ஆளும் கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் இம்முறை பெருவாரியான தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை தமிழ்நாட்டிலும் 8 சீட்டுகளை பெற்ற காங்கிரஸ் இம்முறை கேரளாவையும் குறிபார்த்து களமிறங்குகிறது.

மேலும் படிக்க | TVK : கட்சியின் முதல் உறுப்பினர் ஆனார் விஜய்... முதல்முதலாக பேசி வீடியோவும் வெளியீடு

கடந்த தேர்தலை போல...

அந்த வகையில் தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் தற்போது தொகுதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது. அதாவது கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலை போலவே, காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் 1 தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் கையெழுத்திட்டனர். 

கடந்த தேர்தலை போலவே காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் என்றால், விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல், கொமதேக ஆகிய கட்சிளுக்கும் திமுக அதே தொகுதியைதான் ஒதுக்கியுள்ளது. விசிகவுக்கும் அதே விழுப்புரம், சிதம்பரம் என இரண்டு தனி தொகுதிகளையும், சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளையும், மதிமுக, ஐயூஎம்எல், கொமதேக ஆகிய தலா 1 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

குறையும் உதயசூரியன் எண்ணிக்கை

இதில், ஐயூஎம்எல் கட்சி ராமநாதபுரம் தொகுதியில் தனிச்சின்னத்திலும், கொமதேக நாமக்கல் தொகுதியில் உதயசூரியனிலும் போட்டியிடுகின்றன. எனவே, இந்த முறை திமுக 21 தொகுதிகளில் நேரடியாக வேட்பாளர்களை நிறுத்துகிறது. கொமதேக உள்பட 22 வேட்பாளர்கள் உதயசூரியனில் போட்டியிட உள்ளனர். கடந்த தேர்தலில் கூட்டணியில் இருந்த ஐஜேகே கட்சி தற்போது இல்லை, அக்கட்சி அப்போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. 

இதனால், கடந்த முறை திமுக 20 தொகுதிகளில் தனியாகவும், மதிமுக, விசிக, கொமதேக, ஐஜேகே ஆகிய கட்சிகள் தலா 1 வேட்பாளர்களை உதயச்சூரியனிலும் நிறுத்தியது. 24 தொகுதிகளில் கடந்த முறை உதயசூரியன் போட்டியிட்ட நிலையில், இம்முறை 22 தொகுதிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை முதல் திமுகவில் வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்குவதால், எந்தெந்த தொகுதிகள் எந்தெந்த கட்சிகளுக்கு என்பதும் விரைவில் முடிவாகும் என தெரிகிறது. 

மேலும் படிக்க | தமிழகம் பாஜக பக்கம் திரும்புவதற்கான நல்ல சூழல் உருவாகி உள்ளது - வானதி சீனிவாசன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News