பாசிச பா.ஜ.க அரசையும், கொலைகார அ.தி.மு.க அரசையும் வீழ்த்த ஜனநாயகப் போர்க்களமான நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைவரும் தயாராவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுக்குறித்து நேற்று ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் பேசியாதாவது:
என் உயிரோடு கலந்து இருக்கக்கூடிய தலைவர் கலைஞர் அவர்களுடைய உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
‘நீங்கள் எல்லோரும் தலைவரை மட்டும் இழந்திருக்கின்றீர்கள். நானோ தலைவரை மட்டும் இழந்திடவில்லை என்னுடைய தந்தையையும் சேர்த்து நான் இழந்திருக்கின்றேன்’ என்று குறிப்பிட்டுச் சொன்னேன். அந்தத் தந்தையினுடைய சிலையை இன்னொரு தலைவரோ, தொண்டரோ திறப்பதில் வியப்படைய வேண்டிய அவசியமில்லை. அது புதிதுமில்லை. ஆனால் தந்தையின் சிலையை மகன் திறந்து வைக்கிறார் என்று சொன்னால் உண்மையில் வரலாற்றில் பதிவாகியிருக்ககூடிய ஒரு செய்தியாக அமைந்திருக்கின்றது.
இந்தத் தகுதியை எனக்கு உருவாக்கித் தந்தவரே நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் தான் என்பதையும் நான் பெருமையோடு குறிப்பிட விரும்புகின்றேன். அவர் என்னை பெற்றெடுத்தவர் மட்டுமல்ல. என்னையும் லட்சக்கணக்கான தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவராக உயிர்ப்பித்தவரும் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்தான். இந்த இடத்தில் நான் நிற்கின்ற நேரத்தில் தலைவர் கலைஞர் அவர்களுடைய சிலையை திறந்து வைக்கின்ற நேரத்தில் அந்த சிலைக்கு மலர்கள் தூவப்படுகின்ற நேரத்தில் என்னுடைய எண்ணங்கள் எல்லாம் என்னுடைய சிந்தனைகள் எல்லாம் எங்கோ பறந்து கொண்டிருக்கின்றது. இவ்வளவு உணர்ச்சிமயமாக நான் எப்போதும் இருந்தது இல்லை. அவ்வளவு உணர்ச்சியோடு நான் நின்று கொண்டிருக்கின்றேன்.
இந்தச் சிலையைப் பார்க்கின்ற நேரத்தில் தலைவர் கலைஞர் அவர்களே உயிர் பெற்று மீண்டும் வந்துவிட்டாரோ என்று நினைக்கத் தான் நமக்கெல்லாம் தோன்றுகிறது.
கலைஞர் சிலையை திறந்து வைப்பதில் பெரும் மகிழ்ச்சி. அதேநேரத்தில் இதற்கிடையில் நமக்கு இன்னொரு போர்க்களம் ஒன்று காத்திருக்கின்றது. என்ன அந்த போர்க்களம்? தேர்தல் என்னும் போர்க்களம். நாடாளுமன்றத்தினுடைய தேர்தல் வரப்போகின்றது. பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் அதற்குரிய தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.வருவது நாடாளுமன்றத் தேர்தல் மாத்திரமா? மினி சட்டமன்ற தேர்தல் ஒன்று வேறு இருக்கின்றது. 18 தொகுதியில், கலைஞர் அவர்கள் தொகுதியையும் சேர்த்து திருப்பரங்குன்றம் தொகுதி சேர்த்து, ஓசூர் தொகுதியை சேர்த்து மொத்தம் 21 தொகுதிகளில். என்னைப் பொறுத்தவரையில், என்னைப்பொறுத்தவரை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்களைப் பொறுத்தவரையில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் சட்டமன்ற தேர்தல் வந்தாக வேண்டும் என்ற உணர்வோடு காத்துக் கொண்டிருக்கக் கூடிய இந்தச் சூழ்நிலை.
எனவே எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம். அப்படி வரக்கூடிய நேரத்தில், நிச்சயமாக சொல்கிறேன். கலைஞர் சிலையை திறந்து வைத்துவிட்டு இந்த மேடையில் நின்று கொண்டு நேருக்கு நேராக அவரைப் பார்த்துக்கொண்டு சொல்லுகின்றேன். நிச்சயமாக ஒரு மிகப்பெரிய வெற்றியை திராவிட முன்னேற்றக் கழகம் பெரும் என்பதில் மாற்றம் கிடையாது.
அதனால்தான் இப்பொழுது மத்தியில் இருக்கக்கூடியவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள், மாநிலத்தில் இருக்கக்கூடியவர்கள் எப்படியாவது மக்களை ஏமாற்றி திசை திருப்ப திட்டமிட்டு பல காரியங்களில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு கடந்த 27ஆம் தேதி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா. அடிக்கல் நாட்டு விழா என்று சொல்லக்கூடாது, அடிக்கல் நாட்டு நாடகம் அரங்கேறியிருக்கிறது. ஏனென்று சொன்னால் 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எய்ம்ஸ் அமைக்கப்படும் என்று பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்கள் அறிவித்தார்கள். அந்த அறிவிப்பு அறிவிப்போடு நின்றிருந்தது. இப்பொழுது தேர்தல் வரப் போகின்றது ஒப்புக்கு ஒரு நாடகம் நடத்த அடிக்கல் நாட்டு நாடகம் நடந்திருக்கின்றது. நான்கரை ஆண்டுகாலம் என்ன ஆனது? இதற்கு பிரதமர் விளக்கம் சொல்ல வேண்டும் என்று நான் கேட்டேன்.
அவரிடமிருந்து விளக்கம் வரவில்லை. ஆனால் தமிழ்நாட்டின் பி.ஜே.பி தலைவராக இருக்கக்கூடிய சகோதரி தமிழிசை அவர்கள் பதில் சொன்னார். என்ன சொன்னார் தெரியுமா?
மோடி தன்னுடைய ஆட்சியில் 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்க முயற்சி செய்திருப்பதாக அவர் சொல்லியிருக்கின்றார். என்னுடைய கேள்வி 13 எய்ம்ஸ் மருத்துவமனை வரப்போகிறது என்று சொன்னீர்களே, இப்போது முயற்சி எடுத்திருப்பதாக சொல்கிறீர்களே, இதில் எத்தனை பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றது. இதை சொல்லக் கூடிய திராணி தமிழிசைக்கு இருக்கின்றதா? நான் கேட்கின்றேன்.
ஒன்றும் கிடையாது ஏன், எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக தகவல் அறியக்கூடிய அந்த உரிமை சட்டத்தில் செய்திகளைப் பெற்று இந்த வாரம் இந்தியா டுடே என்ற பத்திரிகையில் அந்த செய்திகளை ஆதாரத்தோடு எடுத்து வெளியிட்டு இருக்கின்றார்கள். அது என்ன செய்தி என்றால், ஒப்புதல் அளிக்கப்பட்ட 13 மருத்துவமனைகளில் ஐந்து மருத்துவமனைகளுக்கு இதுவரை பணம் ஒதுக்கவில்லை. 2020 உத்திரப்பிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்பட உள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் 10 சதவிகிதம் தான் நிதியை ஒதுக்கி உள்ளார்கள். 1000 கோடி ரூபாய் மதிப்பீடு இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு இதுவரையில் 98 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால், நீங்கள் இதிலிருந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும் மற்ற மாநிலங்களுடைய நிலைகள் எல்லாம் என்ன?
திட்டத்தை அறிவித்து விட்டு அடிக்கல் நாட்டி விட்டு பணமே ஒதுக்கவில்லை என்றால் அந்த திட்டத்தை எப்படி செயல்படுத்த முடியும்? இப்படி ஒரு நாடகத்தை நடத்தி இருக்கிறார்கள். மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னீர்களா? நான் இன்னமும் கேட்கிறேன். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நிதி நிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க போகிறீர்கள். தைரியம் இருந்தால், மத்திய பட்ஜெட் அறிவிக்கும் போதே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இவ்வளவு நிதி ஒதுக்கி இருக்கிறோம் எனச் சொன்னால் நான் ஓரளவுக்கு ஏற்றுக் கொள்கிறேன். இதைத்தான் நான் சென்னையில் கேட்டேன். இப்போது இந்த ஈரோட்டில் நான் கேட்கிறேன்.
கடந்த 2014 தேர்தல் தமிழகத்துக்கு பிரச்சாரத்துக்கு வந்த மோடி கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றினாரா?
இதே ஈரோட்டில் பேசிய மோடி மஞ்சள் உற்பத்தியாளர் வாழ்கையை பிரகாசம் ஆக்குவேன் என்றார். செய்தாரா? அவர்தான் பிரகாசமாகிக் கொண்டிருக்கிறார். சேலத்தில் பேசிய மோடி, இரும்பு உற்பத்தியை பெருக்குவேன் என்றார். பெருக்கினாரா? திருப்பூரில் பேசிய மோடி ஜவுளி உற்பத்திக்கு உறுதுணையாக இருப்பேன் என்றார் செய்தாரா? ராமநாதபுரம் சென்று மீனவர்களை காப்பாற்றுவேன். சிங்கள கடற்படையை உள்ளே வர விடாமல் தடுப்பேன் என்றார். நடந்ததா? கன்னியாகுமரியை சுற்றுலா தலம் ஆக்குவேன் என்றார். ஆக்கினாரா? இப்படி சொன்னது எதையுமே செய்யவில்லை. மக்களை ஏமாற்றி மோசடி செய்து வாக்குகளை வாங்கிவிட்டு மீண்டும் ஏமாற்ற வருகிறார் என்று சொன்னால் ஏன் அவர்களுக்கு கோபம் வருகிறது?
நான்கரை வருடங்கள் கடந்து விட்டன. எல்லாத் திட்டங்களையும் உடனே செயல்படுத்தி விட முடியாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை அவர்கள் பதில் சொல்கிறார். அறிவுப்பூர்வமாக சொல்கிறார். அக்கறையும், ஆர்வமும் இருக்குமானால் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தலாம் அதைத்தான் தலைவர் கலைஞர் செய்தார்.
கலைஞரின் சாதனைகளைப் போல ஒன்றே ஒன்று இன்றைய பிரதமர் மோடி அவர்களால் சொல்ல முடியுமா? அதைத்தான் நான் திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறேன். இப்படிச் சாதனைப் பட்டியலை இவர்களால் சொல்ல முடியாது. வேதனைகளைத் தான் சொல்ல முடியும். அது என்னவென்று கேட்டால்,
பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு, விலைவாசிகள் விலை உயர்வு, அனைத்து மானியங்களும் நீக்கம், புதிய வேலை வாய்ப்புகள் இல்லை, ஜிஎஸ்டி என்ற பெயரால் அநியாய வரி, கறுப்புப்பணத்தை மீட்கவில்லை, வாராக்கடன்கள் அதிகம் ஆனது. கோடிக்கணக்கில் கடன் பெற்றவர்கள் தப்பினார்கள், லோக்பால் செயல்படுத்தப்படவில்லை, ரபேல் பேரத்தில் கொள்ளை, கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் வந்து பார்க்கவரவில்லை.
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் முழுமையன நிவாரணம் வழங்கவும் இல்லை. இந்த நிலையில் வெளிநாடு சுற்றுகிறார்.
நாடாளுமன்றம் வருவதில்லை. மாநிலங்களை மதிப்பதில்லை. உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குள் மோதல், சிபிஐ அதிகாரிகளுக்குள் மோதல், ரிசர்வ் பேங்க்கை மதிக்கவில்லை. ஆகவே, வெறும் பேச்சு... பேச்சு...பேச்சு... அதுவும் வெட்டிப் பேச்சு. இதுதான் இன்றைய மத்திய அரசு. இதைத்தான் மோடி செய்து கொண்டிருக்கிறார்.
மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட மத்திய ஆட்சி இனியும் நீடிக்கலாமா? அதேபோல் ஊழல் நிறைந்திருக்கும் கொள்ளைக்கார ஏன் கொலைக்கார ஆட்சி தமிழகத்தில் இருக்கிறது. இதுவும் நீடிக்கலாமா? நான் கேட்கிறேன், இந்தியாவிலேயே இல்லையே உங்கள் பிரதமர்? எந்தக் கிழமையில் அவர் பிரதமராக இருந்திருக்கிறார். எல்லா நாட்களும் அவருக்கு விடுமுறை.
நாங்களாவது ஒரு ஒரு நாள் பிரதமராக இருக்கிறோம். மோடி நிரந்தரமாக விடுமுறை விட்டு விட்டு இருக்கிறாரே! ஆகவே, அவர் சொல்வதுபடி பார்த்தால் எங்கள் கூட்டணியில் கூட ஒவ்வொரு நாளும் ஒரு பிரதமர் என்ற ஜனநாயகம் இருக்கிறது. நான் கேட்கிறேன், என்றைக்காவது பிரதமர் எதிர்க்கட்சிகள் கேட்கின்ற கேள்விக்கு நாடாளுமன்றத்தில் வந்து பதில் சொல்லியிருக்கிறாரா? எதைப்பற்றியும் கவலைப்படுவது கிடையாது. தவறான தகவலை, பொய்ப் பிரசாரத்தை மட்டும் தான் செய்து கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட ஆட்சி மத்தியில் இருக்கிறது.
மாநிலத்தில் ஒரு ஆட்சி, கடந்த 23, 24 தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார்கள். ஒரு அறிவிப்பையும் வெளியிட்டார்கள். 3 லட்சம் கோடிக்கு புதிய ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளோம் என்று சொல்லி இருக்கிறார்கள். நான் கூட கேட்டேன், எந்தெந்த விதத்தில் இதனை ஒதுக்கி இருக்கிறீர்கள். கணக்கைச் சொல்லுங்கள் என்றேன். இதுவரை 3 லட்சம் கோடிக்கு என்னென்ன ஒப்பந்தங்கள் என்று கணக்குச் சொல்லவில்லை.
ஏற்கனவே மறைந்த அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது இப்படி ஒரு மாநாடு நடத்தி 2.42 லட்சம் கோடிக்கு முதலீடுகளை ஈர்த்ததாகச் சொன்னார்கள். நானும் திரும்ப திரும்ப கேட்டேன். எவ்வளவு முதலீடு வந்திருக்கிறது, எவ்வளவு பேருக்கு வேலை கொடுத்து இருக்கிறீர்கள், இதுகுறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தினேன். இதுவரைக்கும் பதில் இல்லை. கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒரு செய்தியை சொன்னார்கள். 60 ஆயிரம் கோடி வரை வந்திருக்கிறது எனச் சொல்கிறார்கள். 2.42 லட்சம் கோடி சொன்னது, இப்போது அவர்களே 60 ஆயிரம் கோடி எனச் சொல்கிறார்கள். இப்படித்தான் எடப்பாடி கணக்கு இருக்குமே தவிர வேறல்ல. எல்லாமே, கமிஷன் - கலெக்ஷன் - கரப்ஷன். எந்த ஒப்பந்தம் போட்டாலும், புதிதாக தொழில் தொடங்க வந்தாலும் 25 சதவீதம் கமிஷன் கேட்டால் யார் தொழில் தொடங்க வருவார்கள்? இது எடப்பாடி ஆட்சியா? செய்யாத்துரை ஆட்சியா? என்ற கேள்விதான் மக்களிடத்தில் இருக்கிறது. மத்தியில் உள்ள ஆட்சி கார்ப்பரேட்டுகளால் நடத்தப்படும் ஆட்சி. மாநிலத்தில் உள்ள ஆட்சி பினாமிகளால் நடத்தப்படும் ஆட்சி. இவர்களை வீழ்த்தக் கூடிய ஜனநாயகப் போர்க்களத்திற்கு அனைவரும் புறப்பட்டாக வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
நான் நிறைவாக குறிப்பிட விரும்புவது, இன்றைக்கு தமிழ்நாட்டில் ஏதோ ஊழல் நடக்கின்ற ஆட்சி மட்டுமல்ல, கொலைக்கார ஆட்சியும் நடந்து கொண்டிருக்கிறது. மறைந்த தலைவர் கலைஞர் அவர்கள் மறைந்ததற்கு பிறகு, இன்றைக்கும் அவர் புகழ் பாடி அவருக்கு சிலை திறந்து வைத்திருக்கிறோம். ஒரு லைவ் ஆக அவரை வைத்திருக்கிறோம். அதுதான் நமக்கு பெருமை, நமக்கு பெருமை என்றால் தமிழ்நாட்டுக்கு பெருமை. 5 முறை முதலமைச்சராக இருந்த நம் தலைவர் முதலமைச்சராக இருந்து மறையவில்லை. அவர் மறைந்த நேரத்தில் இந்தியா முழுவதும் இருந்து அரசியல் கட்சித் தலைவர்களை வைத்து புகழஞ்சலி கூட்டம் நடத்தினோம். யாரும் அதனை மறந்திருக்க மாட்டீர்கள். நான் கேட்கிறேன், அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்து மறைந்திருக்கிறார். அவருக்கு ஒரு இரங்கல் கூட்டம் நடத்தியதுண்டா? புகழஞ்சலி கூட்டம் நடத்தியதுண்டா? அந்த அருகதை உங்களுக்கு இருக்கிறதா? அந்த அம்மையாரின் மரணமே மர்மமாக இருக்கிறது.
தலைவர் கலைஞர் அவர்களும் வயது மூப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருடைய உடல்நலம் குறித்த அறிக்கையை தினமும் வெளியிட்டோம். முதலமைச்சராக இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த அறிக்கை எப்படி வந்தது? இட்லி சாப்பிட்டார். ஒரு கோடி ரூபாய் இட்லி. ஒரு அமைச்சர் தீடீரென்று வெளிவந்து காபி குடித்தார், டி வி பார்த்தார் எனச் சொல்வார். இப்படிச் செய்திகளை சொன்னார்களே தவிர வேறில்லையே. இன்றைக்கு சட்டத்துறை அமைச்சராக இருக்கும் சி.வி.சண்முகம். எப்போதும் நிதானத்தோடு பேசக்கூடியவர். சிபிஐ விசாரணை வேண்டுமென்கிறார். ஒன்றை மட்டும் நான் உறுதியோடு சொல்கிறேன். அதிமுகவுக்கும், திமுகவுக்கும் எத்தனயோ கருத்து மாறுபாடுகள், வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், இறந்தது முதலமைச்சர். அதில் மர்மம் இருக்கிறது. இன்றைக்கு நான் சொல்கிறேன், திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த வினாடி, ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து முறையாக விசாரிக்கப்பட்டு விசாரணைக் கமிஷன் அறிக்கை வெளியிடுவது மட்டுமல்ல, அதற்குக் காரணமானவர்களை சிறையில் அடைப்பது தான் முதல் வேலை. இது சத்தியம். சத்தியத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் சொல்கறேன் அதனை நிச்சயம் நிறைவேற்றுவேன்.
அதேபோல், எடப்பாடி பழனிசாமிக்கு சமீபத்தில் 5 கொலை எடப்பாடி என்று பட்டம் வந்திருக்கிறது. அதுவும் எதனால், யாரால் வளர்க்கப்பட்டார்களோ அவர் தங்கியிருந்த பங்களாவில் ஆவணங்களையும், கோடிக்கணக்கான பணங்களையும் கொள்ளையடிப்பதற்காக இந்த கொலைகள். இதனை மேடையில் இருக்கும் நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. இதனை சொன்னவர்கள், அந்த கொலையில் சம்பந்தபட்டவர்கள். தமிழ்நாட்டின் நிலையை பாருங்கள்! முதலமைச்சராக இருந்து ஊழல் வழக்கில் சிக்கி ஜெயிலுக்கு போனவர் ஜெயலலிதா. ஆனால், கொலைக் குற்றவாளியாக தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் சிறைக்குப் போகப் போகிறார் என்றால், இதைவிட கேவலம் வேறு என்ன இருக்க முடியும்? இது அவருக்கு அவமானமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய அவமானம். ஆகவே தான், நான் உங்களையெல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புவது, இந்த கொலைக்கார ஆட்சிக்கும், அதற்கு முட்டுக்கொடுக்கும் பாசிச பாஜக ஆட்சிக்கு முடிவுகட்ட, பாடம் புகட்ட அனைவரும் தயாராகுங்கள். தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு முன்னால் உறுதி ஏற்போம்! சபதம் ஏற்போம்!
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.