காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதைக் கண்டித்து கர்நாடாகாவில் முழு போராட்டம்.
கர்நாடகாவில் நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் தமிழக சேனல்கள் ஒளிபரப்பை கேபிள் டிவி சங்கங்கள் நிறுத்தி வைத்துள்ளன.
காவிரி நீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திற்கு கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்கள் ஆதரவு தர வேண்டும். இல்லையென்றால், தமிழர்களின் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் புகுந்து தாக்குதல் நடத்த வேண்டும் என கர்நாடகா ரக்சண வேதிகா அமைப்பின் தலைவர் தர்மேந்திரா டிவி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் அவர் 991ஆம் ஆண்டு நடைபெற்றதைப் போல் தமிழர்களுக்கு எதிராக வன்முறை வெடிக்கும் என எச்சரித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதை கண்டித்தும், தமிழக அரசுக்கும் எதிர்ப்பு தெரிவித்தும் கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் கர்நாடக மாநிலத்தின் பல கன்னட அமைப்புகள் மற்றும் சங்கங்களும் மாநிலத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து முழு அடைப்புப் போராட்டத்தை ஆதரித்துள்ளன.
பேரணி, மறியல் மற்றும் உருவ பொம்மை எரிப்பு என அனைத்துத் தரப்பினரும் போராட்டத்தில் குதித்ததால் மாநிலத்தின் சாலை போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பஸ்கள் கார்கள், லாரிகள், ஆட்டோக்களும் என எந்த வாகனமும் ஓடவில்லை. தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்ல வேண்டிய வாகனங்கள், தமிழக எல்லைலேயே போலீசார் நிறுத்தி வருகின்றனர். எந்த வாகனத்தையும் அதற்கு மேல் அனுமதிக்கவில்லை. கர்நாடகாவிலிருந்து எந்த வாகனமும் தமிழகத்திற்குள் வரவில்லை.
பந்த் காரணமாக பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல பகுதிகள் வெறிச்சோடிக் காணப்படுகிறது. பல நிறுவனங்கள் இன்று திறக்கப்படவில்லை. அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.