சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது..!
சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை கொலை வழக்கை CBI ஏற்று நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பதாக தமிழக அரசு வெளியிட்டு இருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவுக்கு ஏற்ப CBCID விசாரித்து வருகிறது.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரையும் பணியில் இருந்த போலீசார் கடுமையாக தாக்கினர். பொது முடக்க நேரத்திற்கும் கூடுதலாக கடைகளை திறந்து வைத்து இருந்தனர் என்பது அவர்களது மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு. இந்த சம்பவம் தேசிய அளவில் பெரிய அதிர்வை ஏற்படுத்தி இருந்தது. கொடூரமான முறையில் வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவிற்கு தந்தை, மகன் இருவரும் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டனர். இதற்குப் பின்னர் இருவரும் மரணம் அடைந்தனர்.
இந்தியடுத்து இந்த சம்பவத்தை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தானாக முன்வந்து ஏற்றது. சிபிஐ இந்த விசாரணையை ஏற்கும் வரை இந்த வழக்கை CBCID விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதையடுத்து, CBCID போலீசார், கொலை வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ் ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். தாக்குதலில் ஈடுபட்ட தற்போது பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குறித்தும் விசாரித்து வருகின்றனர். பென்னிக்ஸின் நண்பர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
READ | ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு முன் இந்த முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்
இதற்கு முன்னதாக இந்த வழக்கை CBI எடுத்து விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் தமிழக அரசு CBI விசாரணை கோரும் கடிதம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்ட நிலையில் மத்திய அரசு அதற்கான ஒப்புதல் அறிவிக்கையை வெளியிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்... “தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் குறித்து மத்திய புலனாய்வுத் துறை (CBI) மூலம் விசாரிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரிக்க முதல்வர் விடுத்த கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு தற்போது அறிவிக்கையை (Notificatio) வெளியிட்டுள்ளது” என தமிழக அரசு தெரிவித்துள்ளது.