கொடுங்கையூர் லாக்அப் மரணம்: இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 காவலர்கள் அதிரடி சஸ்பெண்ட்!

Kodungaiyur Custody death: சென்னை கொடுங்கையூரில் விசாரணைக் கைதி மரணமடைந்த விவகாரத்தில், 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.    

Written by - Chithira Rekha | Last Updated : Jun 13, 2022, 11:38 AM IST
  • கொடுங்கையூர் விசாரணைக்கைதி மரண வழக்கு
  • 5 காவலர்கள் பணியிடை நீக்கம்
  • கொடுங்கையூர் காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் விசாரணை
கொடுங்கையூர் லாக்அப் மரணம்: இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 காவலர்கள் அதிரடி சஸ்பெண்ட்! title=

கடந்த அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியைச் சேர்ந்த பென்னிக்ஸ் - ஜெயராஜ், காவல்துறை விசாரணையின்போது மரணமடைந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது திமுக அரசு அமைந்த பின்னும் விசாரணைக் கைதிகள் மரணமடைவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தலைமைச்செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் கொல்லப்பட்ட சம்பவம்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் உதவி ஆய்வாளர் உள்பட 6 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தற்போது, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி சந்தேக மரணம் அடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் (எ) அப்புவுக்கு நேற்று திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் இருந்த போலீசார், ராஜசேகரை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர். இதையடுத்து, ராஜசேகரை ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

மேலும் படிக்க | மீண்டும் லாக் அப் டெத்?... என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்...

சந்தேக மரணமடைந்துள்ள ராஜசேகர் மீது சோழவரம் காவல் நிலையத்தில் 8 வழக்குகளும், வியாசர்பாடி காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், எம்கேபி நகர் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், மணலி புதுநகர் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் 4 வழக்குகளும், திருநின்றவூர் காவல் நிலையத்தில் 4 வழக்குகளும் என மொத்தம் 23 வழக்குகள் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சோழவரம் காவல் நிலையத்தில் ராஜசேகர் பி கேட்டகிரி சரித்திர பதிவேடு குற்றவாளி.

விசாரணைக் கைதி சந்தேக மரணத்தை தொடர்ந்து சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, காவல் இணை ஆணையர் ராஜேஸ்வரி, புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர். இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், இம்மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கெல்லீஸ் சிறார் நீதிமன்ற 12-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் லட்சுமி, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டார். மேலும், கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், தலைமைக் காவலர்கள் ஜெயசேகர், மணிவண்ணன், காவலர் சத்தியமூர்த்தி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் படிக்க | சனாதனம், வெடிகுண்டு தாக்குதலை நியாயப்படுத்தலாமா? - ஆளுநருக்கு திமுக கடும் கண்டனம்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News