பொருளாதார வீழ்ச்சியை மறைக்கவே சிதம்பரம் கைது, காஷ்மீர் விவகாரத்தை பாஜக அரசு மேற்கொண்டுள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றசாட்டு!!
முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்களும், தற்போது அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களும் வெற்று அறிவிப்புகள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
அண்ணா அறிவாலயத்தின் மேலாளர் பத்மநாபன் இல்ல திருமண விழாவில் ஸ்டாலின் பேசுகையில்; ‘பொருளாதார வீழ்ச்சியை மறைக்கவே சிதம்பரம் கைது, காஷ்மீர் விவகாரத்தை பாஜக அரசு மேற்கொண்டுள்ளது. 27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார நிலை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்தியாவை காப்பாற்ற வேண்டிய சூழல் உருவாகி வருகிறது; இதற்கு நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும்’ என்றார்.
மேலும், தமிழக அமைச்சரவை சுற்றுலா அமைச்சரவையாக மாறியுள்ளது எனக் குற்றம்சாட்டிய ஸ்டாலின், இன்னும் 7,8 அமைச்சர்கள் வெளிநாடு செல்லவிருக்கும் செய்தி தமக்கு கிடைத்திருப்பதாகத் தெரிவித்தார். இரு முறை நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், அவற்றின் தற்போதைய நிலை குறித்த வெள்ளை அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.